டீசல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற திமுக தொண்டர்- திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு
திருச்சி கலெக்டர் அலுவலக குறைதீர்க்கும் கூட்டரங்கில் டீசல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற தி.மு.க. தொண்டரால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி மாவட்டம், சமயபுரத்தை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 64). தி.மு.க. தொண்டரான இவர், பி.எஸ்சி. படித்துள்ளார். தற்போது, அவர் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் பகுதியில் தங்கி அங்கு வழங்கப்படும் அன்னதானத்தை சாப்பிட்டு வாழ்க்கையை ஓட்டி வருகிறார். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அப்பகுதியில் பணியாற்றும் மாநகராட்சி ஊழியர் ஒருவர், இவரை பிச்சைக்காரன் என்று கிண்டல் செய்ததாக தெரிகிறது. இதனால் ஏற்பட்ட தகராறின் போது போலீசார் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர். ஆனாலும் அவர்கள் 2 பேருக்கும் இடையே பிரச்சினை நீடித்து வந்தது. கடந்த சில வாரங்களுக்கு முன் அந்த மாநகராட்சி ஊழியர், 2 பிச்சைக்காரர்கள் மூலம் மூர்த்தியை தாக்கியதாக கூறப்படுகிறது. அத்துடன் மூர்த்தியிடம் இருந்த ஓட்டுனர் உரிமம் மற்றும் பணத்தை பறித்துசென்றதாக தெரிகிறது. இதுபற்றி மூர்த்தி திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகாரின் பேரில் அந்த மாநகராட்சி ஊழியர் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்து சென்றுள்ளார். இந்த நிலையில் மாநகராட்சி ஊழியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை வேலையில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி மூர்த்தி, நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தார். தி.மு.க. கரைவேட்டி மற்றும் துண்டு அணிந்து வந்த அவர் மனு கொடுப்பதற்காக குறைதீர்க்கும் கூட்டரங்குக்குள் சென்றார்.
மேலும் அவர் அங்கு தனது கோரிக்கையை கூறிக்கொண்டு கோஷமிட்டவாறு தனது இடுப்பில் மறைத்து வைத்து இருந்த டீசலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் அவரை தடுத்து மீட்டு, கூட்டரங்கை விட்டு வெளியே அழைத்து வந்தனர். பின்னர், அங்கு நின்று இருந்த தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் மூர்த்தி மீது தண்ணீரை ஊற்றினர். அதன்பிறகு, விசாரணைக்காக செசன்சு கோர்ட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் சேரன், சப்-இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் மூர்த்தியை போலீஸ் வாகனத்தில் ஏற்றி சென்றனர். கலெக்டர் அலுவலகத்துக்கு வரும் பொதுமக்கள் இதுபோன்று தீக்குளிக்கும் முயற்சியை தடுப்பதற்காக கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் போலீசார் கடும் சோதனை செய்த பிறகே அனைவரையும் உள்ளே அனுமதிக்கிறார்கள். பிறகு எப்படி மூர்த்தி டீசல் பாட்டிலுடன் உள்ளே வந்தார் என்று போலீசார் அவரிடம் விசாரித்தனர். அதற்கு, போலீசார் சோதனை செய்ததால், பையில் கொண்டு வந்த டீசல் பாட்டிலை இடுப்பில் மறைத்து வைத்துக்கொண்டு, மாற்றுத்திறனாளி ஒருவருக்கு உதவி செய்வது போல் 3 சக்கர சைக்கிளை தள்ளிக்கொண்டு உள்ளே வந்தேன் என தெரிவித்தார். இதைத்தொடர்ந்து தற்கொலைக்கு முயன்றதாக மூர்த்தி மீது செசன்சு கோர்ட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.