ஆயுதபூஜையை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் பூக்களின் விலை உயர்வு
ஆயுதபூஜையை முன்னிட்டு பூக்களின் விலை கடும் உயர்ந்துள்ளது. பூஜை பொருட்கள் வாங்க கடை வீதிகளில் கூட்டம் அலைமோதியது.
நவராத்திரி விழாவில் முக்கிய நிகழ்வான ஆயுத பூஜை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வீடுகள் மற்றும் அலுவலகங்கள், நிறுவனங்களில் பூஜை செய்து வழிபாடு நடத்துவார்கள். இந்நிலையில் ஆயுத பூஜையை முன்னிட்டு புதுக்கோட்டையில் பூக்களின் விலை கிடு கிடுவென உயர்ந்திருந்தது. புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பூ கமிஷன் மண்டி, பூ மார்க்கெட்டில் பூக்கள் வாங்க வியாபாரிகள், பொதுமக்கள் ஏராளமானேர் இன்று குவிந்தனர். இதேபால மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பக்கத்து மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் பலர் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இதில் மல்லிகை பூ கிலோ ரூ.1,500 முதல் ரூ.1,800- வரைக்கும் ஏலம் போகி விற்பனையானது. கடந்த சில நாட்களாக மல்லிகை பூ கிலோ ரூ.500 முதல் 600-க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது. சில்லறை வியாபாரிகள் பலர் தங்களுக்கு தகுந்தாற்போல மல்லிகை பூக்களை வாங்கி சென்றனர். புதுக்கோட்டையில் பூ மார்க்கெட்டில் இன்று பூக்கள் விற்பனை விவரம் கிலோ கணக்கில் வருமாறு.. செவ்வந்தி பூ ரூ.300-க்கும், அரளிப்பூ ரூ.500-க்கும், கோழிக்கொண்டை பூ ரூ.80-க்கும், செண்டி பூ ரூ.80-க்கும், ரோஜா பூ ரூ.120-க்கும், சம்பங்கி ரூ.350-க்கும் விற்பனையானது. கடந்த சில நாட்களாக இவற்றின் விலை குறைந்திருந்தது. தற்போது பண்டிகையையொட்டி சற்று அதிகரித்துள்ளது. மொத்த வியாபாரிகளிடம் இருந்து பூக்களை வாங்கிச் சென்ற சில்லறை வியாபாரிகள் அவற்றின் விலையை விட சற்று கூடுதல் விலைக்கு வைத்து விற்பனை செய்தனர்.
இதேபோல பண்டிகையையொட்டி பூஜை பொருட்களான தேங்காய், வாழைப்பழம், பழ வகைகள், பொரி, கடலை, அவல், வெல்லம், வாழைக்குலை, பூசணிக்காய் உள்ளிட்டவை வாங்க புதுக்கோட்டையில் தெற்கு ராஜ வீதி உள்ளிட்ட கடை வீதிகளில் இன்று பொதுமக்கள் குவிந்தனர். இதனால் கடைவீதிகளில் கூட்டம் அலைமோதியது. வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப சிறிய பொட்டலங்கள் அடிப்படையில் பொரி, கடலை, அவல், வெல்லம் நிரப்பி விற்பனை செய்தனர். பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச்சென்றனர். பொதுமக்கள் கூட்டம் அலைமோதியதால் கடைவீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து வடகாடு பகுதிகளில் விற்பனைக்காக கதம்ப பூக்கள் மாலைகள் கட்டும் பணிகள் ஆங்காங்கே பூ கட்டும் தொழிலாளிகள் மூலமாக மும்முரமாக நடந்து வருகிறது. அன்னவாசல், இலுப்பூர் ஆகிய பகுதிகளில் நேற்று முதலே ஆயுதபூஜைக்கான பொருட்கள் விற்பனை நடைபெற தொடங்கியது இதனை வாங்கிட பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பின்னர் பொதுமக்கள் பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றனர். வடகாடு பகுதியில் எலுமிச்சம் பழம் விற்பனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது எலுமிச்சை பழங்கள் ரூ.50, 55-க்கு மட்டுமே விற்பனை ஆகி வருகிறது. இதேபோல் ஆவுடையார்கோவில் கடைவீதியில் வாழைமரங்கள், பழம், அவல், பொரி உள்ளிட்ட பூஜை பொருட்களை பொதுமக்கள் வாங்கி சென்றனர். இந்த ஆண்டு பொருட்களின் விலை சற்று உயர்ந்துள்ளதால் விற்பனை குறைந்துள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்