திருச்சியில் தகுதிச்சான்று, இன்சூரன்ஸ் இல்லாமல் இயங்கிய 6 ஆட்டோ பறிமுதல்
75 ஆட்டோக்களில் அதிரடி சோதனை நடத்தியதில் தகுதிச்சான்று, இன்சூரன்ஸ் இல்லாமல் பள்ளி குழந்தைகளை ஏற்றி சென்ற 6 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதிலும் குறிப்பாக பள்ளிகள் இயங்கக்கூடிய சாலைகளில் ஆட்டோக்கள், அதிகளவில் இயக்கப்படுவதால் தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசு விதிமுறைகளை மீறி அதிக அளவில் குழந்தைகளை ஆட்டோக்களில் ஏற்றி செல்லும் அவல நிலை இருக்கிறது. இதனால் சில சமயங்களில் விபத்துகளும் அரங்கேறி வருகிறது. ஆகையால் இவற்றை முற்றிலும் தடுக்க வேண்டும் பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென, பெற்றோர்கள் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் வட்டார போக்குவரத்து அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அப்போது திருச்சி மாவட்டத்தில் அதிக அளவில் ஆட்டோக்கள் இயங்கி வருவதாகவும், மேலும் போக்குவரத்து விதிமுறைகளை முழுமையாக பின்பற்றவில்லை, ஆகையால் தான் விபத்துக்கள் அடிக்கடி ஏற்படுகிறது< என புகார்கள் எழுந்து வருகிறது. ஆகையால் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் உடனடியாக அதிரடி சோதனையில் ஈடுபட்டு முறையான ஆவணங்கள் இல்லாமல் இயங்கும் ஆட்டோவின் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து ஸ்ரீரங்கம் வட்டார போக்குவரத்து அலுவலர் குமார் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அருண்குமார், முகமதுமீரான் ஆகியோர் நேற்று காலை ஸ்ரீரங்கம் மேலூர்ரோடு அருகே பள்ளிக்குழந்தைகளை ஏற்றி சென்ற 75 ஆட்டோக்களை நிறுத்தி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் ஆட்டோக்களில் தகுதிச்சான்று மற்றும் இன்சூரன்ஸ் இல்லாத ஆட்டோக்கள், அளவுக்கு அதிகமான குழந்தைகளை ஏற்றி சென்ற ஆட்டோக்கள் என மொத்தம் 6 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அந்த வாகனங்களுக்கு ரூ.60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கூறுகையில்.. முறையான ஆவணங்கள் இல்லாமல் இனிவரும் காலங்களில் ஆட்டோக்கள் இயங்கக் கூடாது, அவ்வாறு விதிமுறைகளை மீறி இயக்கினால் சட்டரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் . மேலும் தொடர்ந்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் அந்தந்த பகுதிகளில் அடிக்கடி ஆய்வு மேற்கொள்ள வேண்டும். பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ -மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும். இனி இது போன்ற புகார்கள் வராத வண்ணம் அதிகாரிகள் பணி ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்