திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 6 வாகனங்கள் மோதி விபத்து - 30 பேர் காயம்
திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 6 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் அப்பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு.
தமிழ்நாடு முழுவதும் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்தவகையில் திருச்சி மாவட்டத்தில் அதிகாலை 3 மணி முதல் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வந்தது. இந்நிலையில், அதிகாலை 4 மணி அளவில் திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில், சென்னையிலிருந்து சாயல்குடி நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. இந்தப் பேருந்தை விருதுநகரைச் சேர்ந்த மாரிசாமி என்பவர் ஓட்டிவந்தார். அப்போது, செட்டியாபட்டி, கோரையாற்று பாலம் அருகே அந்தத் தனியார் பேருந்தும், டாரஸ் லாரியும் ஒன்றோடு ஒன்று முந்துவதற்கு முயன்றபோது, செட்டியாபட்டி, கோரையாற்று பாலத்தின் தடுப்பு சுவரில் தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.
மேலும், இந்த பேருந்தின் பின்னால் வந்த இரண்டு தனியார் பேருந்துகள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான பேருந்தின் ஓட்டுநர்கள் விபத்து குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது, நெடுஞ்சாலையில் வந்த மற்றொரு லாரி மூன்றாவது பேருந்தின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது. மழை நேரம் என்பதால் இந்த விபத்துக்கள் குறித்து அறியாத மேலும் இரண்டு பேருந்துகள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து மோதி விபத்துக்குள்ளானது. அந்த வகையில் திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஒன்றன்பின் ஒன்றாக வந்த 5 பேருந்துகள் மற்றும் ஒரு லாரி உட்பட ஆறு வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது.
இந்நிலையில் பேருந்துகளில் பயணம் செய்த பயணிகளில் 30க்கும் மேற்பட்டோருக்கு லேசான காயம் ஏற்பட்டது. மேலும், இந்த விபத்தில் இரண்டு ஓட்டுநர்கள், மூன்று பெண் பயணிகள், இரண்டு ஆண் பயணிகள் என ஏழு பேருக்கு தலை மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டு, திருச்சி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட இந்த விபத்து காரணமாகப் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அந்த சாலையில் சென்ற வாகனங்கள் சுமார் 3 மணி நேரம் காத்திருந்து, விபத்துக்குள்ளான வாகனங்கள் அகற்றப்பட்ட பின்பு புறப்பட்டுச் சென்றது.
மேலும் இதுகுறித்து பொதுமக்களுடைய கருத்து..
திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தொடர் விபத்துக்கள் நடைபெற்று வருகிறது. அவ்வப்போது உயிர்பலியும் ஏற்படுகிறது. பலமுறை போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விபத்துக்கள் நடக்கக்கூடிய பகுதிகளில் ஆய்வு செய்கிறார்கள். ஆனால் விபத்துக்களை தடுப்பதற்கான முயற்சிகளை இதுவரை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். குறிப்பாக இது போன்ற விபத்துக்கள் அதிகாலை நேரங்கள் மற்றும நள்ளிரவு நேரங்களில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இவற்றை தடுப்பதற்கு நெடுஞ்சாலைகளில் ஆங்காங்கே முன் அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும். நெடுஞ்சாலை முழுவதும் போக்குவரத்து காவல்துறையினர் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.