திருச்சி : ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக 3 கோடி மோசடி, 3 பேர் மீது வழக்குப்பதிவு.
திருச்சியில் ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக 20 பேரிடம் ரூ.3 கோடி மோசடி செய்த முன்னாள் பிஷப் மீது வழக்கு பதிவு.
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரமேஷ்குமார் (வயது45). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு கிறிஸ்துவ அமைப்பில் உறுப்பினராக இருந்து வருகிறார். திருச்சி மாவட்டம் ஏர்ப்போட் பகுதியைச் சேர்ந்த மார்ட்டின் (70) இவர் திருச்சியில் உள்ள கிறிஸ்துவ அமைப்பில் இருந்து வருகிறார். இவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மார்ட்டின், தான் சிறிது நாட்களில் திருச்சி மாவட்டத்தில் பிஷப் ஆகிவிடுதாகவும் அதனால் தங்களுக்கு தெரிந்த நபர்களுக்கு பள்ளிகளில் ஆசிரியராக பணி வாங்கி தருவதாகவும் ரமேஷிடம் கூறியுள்ளார்.
மேலும் செனட் உறுப்பினராக இருந்த ரமேஷ்குமாரிடம், டிஇஎல்சி குறித்த வழக்கு உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் உள்ளதால் வழக்கு செலவிற்காக பணம் தேவைப்படுகிறது. இதற்கான பணம் கொடுத்தால் வழக்கு முடிந்தவுடன் வேண்டியவர்களுக்கு ஆசிரியர் பணி வழங்குவதாக பிஷப் மார்ட்டின் கூறியுள்ளார். இதை நம்பிய ரமேஷ் தனக்கு தெரிந்த 20 நபர்களிடம் பணம் வசூலித்து கடந்த 2009 ஆம் ஆண்டு ரூ.1 கோடியே 50 லட்சம் கொடுத்துள்ளதாக தெரிகிறது. பின்னர் 2013 ஆம் ஆண்டு ரூ.1 கோடியே 50 லட்சம் கொடுத்துள்ளார். மொத்தம் ரூ. 3 கோடியை மார்ட்டின் பெற்றுள்ளார். பின்னர் நீண்ட நாட்கள் ஆகியும் ரமேஷிடம் கூறியது போல மார்ட்டின் பிஷப் ஆகவில்லை. ஆசிரியர் பணியும் யாருக்கும் வாங்கி கொடுக்கவில்லை தகவல் தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த ரமேஷ், மதுரையில் இருந்து திருச்சியில் உள்ள மார்ட்டினுக்கு தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார். இதற்கு மார்ட்டின், பல காரணங்களை கூறி பணம் கொடுக்காமல் சமாளித்துள்ளார். மேலும் ரமேஷிடம் பணம் கொடுத்தவர்கள் தொடர்ந்து நேரிலும், தொலைபேசி மூலமாகவும் கேட்டுள்ளனர். இந்நிலையில் அவர்களுக்கு ரமேஷ் பணத்தை விரைவில் வாங்கி தருவதாக கூறியுள்ளார்.
மேலும் மார்ட்டினிடம் ரமேஷ் தொலைபேசி மூலமாக இத்தனை ஆண்டுகள் ஆகியும் வேலை வாங்கி தராததால் என்னை நம்பி பணம் கொடுத்தவர்கள் என்னிடம் பிரச்சனை செய்கிறார்கள் ஆகையான் தான் கொடுத்த பணைத்தை உடனடியாக கேட்டுள்ளார். இந்நிலையில் மார்ட்டின் பொய்யான காரணங்களை கூறி செல்போனை எடுக்க மறுத்துவந்தார். இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ரமேஷ், திருச்சி மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் மாநகர காவல்துறை ஆணையர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் காவல்துறையினர் மார்ட்டின் மற்றும் அவரது மனைவி ஜீவஜோதி (60), ஹென்றி ராஜசேகர் (65) ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் கார்த்திகேயன் கூறும்போது..தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அரசு வேலை வாங்கி தருவதாக பலர் ஆசைவார்த்தை கூறி பணத்தை மோசடி செய்து வருகிறார்கள். இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. ஏனென்றால் அரசு வேலை என்பது முறையாக விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டு, தேர்வு அல்லது நேர்முகத்தேர்வு நடத்திய பிறகுதான் தேர்வு செய்வார்கள். ஆனால் ஒரு சிலர் அரசியலில் முக்கிய நபர்களை தனக்கு தெரியும், என்னால் அரசு வேலை வாங்கி தர முடியும், ஆனால் பணம் செலவாகும் என ஆசை வார்த்தைகளை பலரிடம் கூறி மோசடி வழக்கு தொடர்ந்து தமிழகத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பொதுமக்கள் தேவையில்லாமல் யாரையும் நம்பி பணத்தைக் கொடுத்து ஏமாற வேண்டாம் என திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார். இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.