திருச்சி சிறப்பு முகாமில் இருந்து 2 பேர் இலங்கைக்கு அனுப்பி வைப்பு
கஞ்சா வழக்கில் விடுதலையானதால் திருச்சி சிறப்பு முகாமில் இருந்து 2 பேர் இலங்கைக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
திருச்சி-புதுக்கோட்டை சாலையில் மத்திய சிறை அமைந்துள்ளது. இந்த சிறை வளாகத்தில் சிறப்பு முகாம் என்ற பெயரில் தனியாக ஒரு வளாகம் உள்ளது. தமிழ்நாட்டில் குற்ற வழக்குகளில் கைது செய்யப்படும் வெளிநாட்டினர் இந்த சிறப்பு முகாமில் தங்க வைக்கப்படுவது வழக்கம். இதன்படி, இங்கு இதுவரை, சட்ட விரோதமாக வெளிநாடு செல்ல முயன்றது, போலி பாஸ்போர்ட் முறைகேடு உள்ளிட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்ட இலங்கை தமிழர்கள் சுமார் 75 பேர் உள்பட நைஜீரியா, பல்கேரியா, வங்கதேசம், இந்தோனேசியா நாட்டினர் என்று சுமார் 130 வெளிநாட்டினர் தற்போது திருச்சி சிறப்பு முகாமில் தங்கி உள்ளனர். இவர்கள் மீதான வழக்கு விசாரணை முடிந்து, விடுதலை செய்யப்படும் வரை சிறப்பு முகாமில் தங்க வைக்கப்படுவார்கள்.
இந்த நிலையில் இலங்கையை சேர்ந்த முகமது ரிகாஷ் என்பவர் கடந்த 2020-ம் ஆண்டு கஞ்சா விற்றதாக சென்னை போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் கோர்ட்டில் நடந்த வழக்கில் அவர் விடுதலை செய்யப்பட்டார். இதேபோல் கடந்த 2021-ம் ஆண்டு இலங்கையில் இருந்து படகு மூலம் இந்தியா வந்த நிஜாமுதீன் என்பவர் கைதுசெய்யப்பட்டார். இந்த வழக்கில் இவர் விடுதலை செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து இருவரும் திருச்சி சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டு இருந்தனர். இதனையடுத்து அவர்கள் தங்களை சொந்தநாட்டுக்கு அனுப்பி வைக்க கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் மத்திய அரசு அவர்களை இலங்கைக்கு அனுப்ப ஒப்புதல் வழங்கியது. இதனையடுத்து நேற்று தமிழக அரசு அவர்களை இலங்கைக்கு அனுப்பி வைத்தது. நேற்று காலை 10.30 மணி அளவில் திருச்சி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்