Trichy: காவு வாங்கும் கொள்ளிடம் ஆறு.. அடுத்தடுத்து மாணவர்கள் மரணம்.. பெரும் சோகம்..!
திருச்சி மாவட்டம், திருவானைக்காவல், லால்குடி பகுதி கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய மாணவர் உள்பட 2 பேர் இறந்தனர்.
திருச்சி மலைக்கோட்டை சறுக்குப்பாறை பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் ஆதிஸ்ரீ ஹரிஹரசுதன் (வயது 15). 10-ம் வகுப்பு படித்து வந்த இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு திருவானைக்காவல் பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் நண்பர்களுடன் குளிக்க சென்றார். இந்த நிலையில் ஆதிஸ்ரீ ஹரிஹரசுதன் எதிர்பாரதவிதமாக நீரில் மூழ்கினார்.
கொள்ளிடம் ஆறு:
இது குறித்து ஸ்ரீரங்கம் தீயணைப்பு நிலையத்திற்கும், போலீஸ் நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் ஆற்றில் மூழ்கிய ஆதி ஸ்ரீ ஹரி ஹரசுதனை கடந்த 3 நாட்களாக தேடி வந்தனர். இந்நிலையில் கொள்ளிடம் ஆற்றில் மணல் திட்டு அருகே ஆதிஸ்ரீஹரிஹரசுதன் உடலை தீயணைப்பு துறையினர் நேற்று கண்டெடுத்தனர். பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விருதுநகர் மாவட்டம், ஆமத்தூரை சேர்ந்த அந்தோணி குரூசின் மகன் ஜான் போஸ்கோ(28). இவரும், கடலூர் மாவட்டம், பெண்ணாடத்தை சேர்ந்த தர்மன் மகன் தமிழ்ச்செல்வன்(29), விருதுநகர் சிவகாசியைச் சேர்ந்த அடைக்கலம் மகன் சங்கர்(24), சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த பாலுச்சாமியின் மகன் சிவக்குமார் ஆகியோர் திருச்சியை அடுத்த துவாக்குடியில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் நிறுவனத்தில் தங்கி, வேலை செய்து வந்தனர். நேற்று முன்தினம் விடுமுறை நாள் என்பதால் அவர்கள் 4 பேரும் லால்குடி அருகே இடையாற்றுமங்கலம் பகுதியில் கிளிக்கூடு செல்லும் தற்காலிக மண் சாலையின் அருகில் செல்லும் கொள்ளிடம் ஆற்றில் குளிக்க முடிவு செய்தனர்.
இளைஞர் உயிரிழப்பு:
குறிப்பாக முதலில் ஜான் போஸ்கோ ஆற்றில் இறங்கி குளித்தார். அப்போது, அவர் நீரில் மூழ்கி தத்தளித்தார். இதைக்கண்ட தமிழ்ச்செல்வன் ஆற்றில் இறங்கி ஜான் போஸ்கோவை மீட்க முயன்றபோது, அவரும் நீரில் மூழ்கினார். இதையடுத்து சங்கர், சிவக்குமார் ஆகியோர் ஆற்றில் இறங்கி 2 பேரையும் காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை. இது பற்றி தகவல் அறிந்த லால்குடி மற்றும் ஸ்ரீரங்கம் தீயணைப்பு நிலைய வீரர்கள் ஆற்றில் இறங்கி 2 பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர தேடுதலுக்கு பின்னர் நீரில் மூழ்கி உயிரிழந்த தமிழ்ச்செல்வனின் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். தொடர்ந்து ஜான் போஸ்கோவை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் நேற்று காலையில் மீண்டும் தேடும் பணி நடந்தது. அப்போது, அவர் பிணமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து லால்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதுக்குறித்து மாவட்ட நிர்வாக அதிகாரிகள் கூறியது.. மாவட்ட நிர்வாகம் சார்பாக தொடர்ந்து அறிவுரைகள் வழங்கபட்டு வருகிறது. காவிரி, கொள்ளிட ஆற்றில் குளிக்க யாரும் செல்ல வேண்டாம், குறிப்பாக ஆழமான பகுதியில் இளைஞர்கள் ஆபத்தை உணராமல் செல்வதால் இதுபோன்று சோகமான சம்பவங்கள் நடைபெறுகிறது. ஆகையால் மாவட்ட நிர்வாக கூறும் அறிவுரைகளை பொதுமக்கள் கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.