’தமிழகத்தில் கடந்த ஆண்டில் மட்டும் 17,320 பேரை காணவில்லை’- தேசிய குற்ற ஆவணத்தில் தகவல்
’’தமிழ்நாட்டின் மத்திய மண்டலத்தை பொறுத்தவரை கடந்த ஆண்டில் மட்டும் 2,558 பேர் காணாமல் போன நிலையில் இந்த வழக்குகளை மெத்தனம் காட்டாமல் விசாரணை நடத்த உத்தரவு’’
திருச்சி மத்திய மண்டலத்தில் 2020ஆம் ஆண்டில் 2,588 பேர் காணாமல் போயுள்ளனர். இதில் 70 சதவீதம் பேர் பெண்கள் ஆகும் கடந்த 2019 ஆண்டைவிட 2020 ஆம் ஆண்டு 748 பேர் அதிகமாக காணாமல் போயுள்ளனர். இந்தியாவில் பதிவாகும் குற்றங்கள் தொடர்பான அறிக்கையை தேசிய குற்ற ஆவண காப்பகம் ஒவ்வொரு ஆண்டும் வெளியிடும், இந்த அறிக்கையில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு எதிரான குற்றங்கள், சைபர் கிரைம் குற்றங்கள், காணாமல் போனவர்கள் தொடர்பான தகவல்கள் என்று அனைத்து தகவல்களும் வெளியிடப்படும். இதன் படி 2020 ஆம் ஆண்டுக்கான குற்ற அறிக்கையை தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி நாடு முழுவதும் 2020ஆம் ஆண்டில் 3,23,170 பேர்கள் நாடு முழுவதும் காணாமல் போயுள்ளனர். இதில் தமிழகத்தில் மட்டும் 17,320 பேர்கள் காணாமல் போயுள்ளனர், இதில் மத்திய மண்டலத்தில் மட்டும் 2,558 பேர் காணாமல் போயுள்ளனர்.
இதன்படி அரியலூர் மாவட்டத்தில் 288 பேர், கரூர் மாவட்டத்தில், 244 பேர், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 232 பேர், பெரம்பலூர் மாவட்டத்தில் 139 பேர், புதுக்கோட்டை மாவட்டத்தில் 392 பேர், தஞ்சாவூர் மாவட்டத்தில் 454 பேர், திருவாரூர் மாவட்டத்தில் 183 பேர், திருச்சியில் 408 பேர், திருச்சி நகரத்தில் 248 பேர், என்று மொத்தம் 2,558 பேர் காணாமல் போய் உள்ளனர்.இவர்களில் 2,049 பேர்கள் பெண்கள் ஆகும். இதன்படி அரியலூரில் 241 பேர், கரூரில் 187 பேர், நாகையில் 191 பேர், பெரம்பலூர் 115 பேர், புதுக்கோட்டையில் 320 பேர், தஞ்சாவூரில் 359 பேர், திருவாரூரில் 143 பேர், திருச்சியில் 321 பேர், திருச்சி நகரத்தில் 172 பேர் பெண்கள் காணாமல் போயுள்ளனர்.மேலும் அரியலூர் 47 பேர், கரூர் 57 பேர், நாகப்பட்டினம் 41 பேர், பெரம்பலூர் 24 பேர், புதுக்கோட்டை 72 பேர், தஞ்சாவூர் 95 பேர், திருவாரூர் 40 பேர், திருச்சி 87 பேர், திருச்சி நகரம் 76 பேர் இன்று மொத்தம் 539 ஆண்கள் காணாமல் போய் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை கடந்த ஓராண்டில் குறிப்பாக மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடங்கியது முதல் 15 வயது முதல் 18 வயதுக்கு கீழ் உள்ள மாணவிகள் மாயமாவது அதிகரித்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விட 30 முதல் 40 சதவீதம் இளம் வயது பெண்கள் மாயமாவதாக புகார்கள் வருகிறது. இதில் 80 சதவீத காதல் திருமணம் ஆகவே இருக்கிறது, என்றார் காவல்துறையினர் அதிகாரிகள். மேலும் காவல் நிலையத்திற்கு காணாமல் போனவர்கள் குறித்த புகார்களுடன் வருபவர்களை காக்க வைக்காமல் உடனே வழக்குப்பதிந்து தேடும் பணியில் ஈடுபடவேண்டும். எக்காரணத்தை கொண்டும் காணாமல் போனவர்களோடு குறித்த புகார்களோடு வருபவர்களை காவல்துறையினர் சமாதானம் கூறி திருப்பி அனுப்பவோ, அழைக்கவோ, மெத்தனமாக செயல்படுவது, செயல்படக்கூடாது என்று திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.