(Source: ECI/ABP News/ABP Majha)
திருச்சியில் பரபரப்பு.. தொழிலதிபரை கடத்தி 16 லட்சம் கொள்ளை, மர்ம நபர்களுக்கு போலீசார் வலை வீச்சு
ரியல் எஸ்டேட் தொழிலில் இடத்தை விற்பது போன்று பட்டப் பகலில் தொழில் அதிபரை கடத்தி காட்டுப் பகுதியில் வைத்து துன்புறுத்தி 16 லட்சத்தை திருடிய கும்பல் - நடவடிக்கை எடுக்க கோரி காவல்நிலையத்தில் புகார்.
தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு பின்னையூர் பகுதியில் சேர்ந்த மணிகண்டன் இவர் திருச்சி கே.கே.நகர் மகாலட்சுமி நகரில் வாடகை கடையில் ஓம் என்டர்பிரைசஸ் என்ற பெயரில் உலர்ந்த பழங்கள், ஏலக்காய் உள்ளிட்ட பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி இறக்குமதி செய்யும் தொழில் செய்து வருகிறார்.
இந்த நிலையில் மணிகண்டன் கடை அருகே இரண்டு கடைகள் வாடகைக்கு விடப்படாமல் உள்ளது. அந்த கடையில் வாடகைக்கு கேட்பது போன்று கணேசன் என்பவர் அறிமுகம் ஆகி உள்ளார். பின்னர் கணேசன் என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்வதாகவும் மணிகண்டனிடம் நண்பராக பழகியுள்ளார்.
மேலும் கணேசன் இடத்தை விற்பதற்கு மணிகண்டனிடம் கேட்டபோது இடத்தை வாங்க ஆள் இருக்கிறது என மணிகண்டன் கூறியுள்ளார்.
இந்த நிலையில் கடந்த 14ஆம் தேதி காலை மணிகண்டன் அலுவலகத்தை திறந்து பணி செய்துள்ளார். அப்போது கணேசன் உள்ளிட்ட 5 பேர் மணிகண்டன் அலுவலகத்திற்கு சென்று கத்தியை காட்டி மிரட்டி மணிகண்டன் காரிலேயே கடத்தி சென்று கீரனூர் காட்டுப் பகுதியில் கட்டி போட்டு, செல்போன் ஏடிஎம் கார்டுகளை பரித்துள்ளனர்.
தொழிலதிபரை கடத்தி 16 லட்சம் கொள்ளை - பொலீசார் விசாரணை
மேலும், ஏடிஎம் கார்டு, ஜி பே மூலம் 3 லட்சத்து 60 ஆயிரம் பணத்தை எடுத்துள்ளனர். மேலும் வங்கி காசோலையில் கையெழுத்து போடுமாறு அவரை அடித்து துன்புறுத்தி உள்ளனர், வலி தாங்காமல் வங்கி காசோலையில் கையெழுத்து போட்டுள்ளார்.
காசோலையை பெற்றுக் கொண்ட கும்பல் ஆக்சிஸ் வங்கிக்கு சென்று 12 லட்சத்து 40 ஆயிரம் பணத்தையும் எடுத்துக்கொண்டனர். மேலும் அவரை அடித்து துன்புறுத்திய வீடியோவை பதிவு செய்து மற்றொரு நபருக்கு அனுப்பி உள்ளார்.
பின்னர் இது பற்றி வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டி விட்டு மர்ம கும்பல் காரில் அவரை விட்டு சென்றுள்ளனர்.
இதுகுறித்து மணிகண்டன் கேகே நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் ரியல் எஸ்டேட் தொழில் செய்வது போல் நடித்து பட்ட பகலில் அலுவலகத்திற்கு வந்து தன்னை துன்புறுத்தி 16 லட்சம் பணத்தை திருடி உள்ளனர்.
மேலும், இவர்கள் 7 பேரையும் பிடித்து பணத்தை மீட்டு தர வேண்டும் என்றும், அவர்கள் மீது குற்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து புகாரை பெற்றுக் கொண்ட கே.கே நகர் போலீசார் மணிகண்டன் அலுவலகத்திற்கு எதிரே உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து மர்மக்கும்பலை தேடி வருகின்றனர்.
திருச்சியில் தொழிலதிபரை கடத்தி 16 லட்சம் கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் யார் ஈடுபட்டிருந்தாலும் உடனடியாக அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.