மாணவர்கள் இப்போது முதலே சிறுதானிய உணவுகளை உண்ணுங்கள் - துணை சபா நாயகர் பிச்சாண்டி அறிவுரை
திருவண்ணாமலையில் நடைபெற்ற சிறுதானிய உணவு திருவிழாவில் 25 நிமிடத்தில் 347 சிறுதானிய உணவு பொருட்கள் தயாரிக்கப்பட்டு உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது.
![மாணவர்கள் இப்போது முதலே சிறுதானிய உணவுகளை உண்ணுங்கள் - துணை சபா நாயகர் பிச்சாண்டி அறிவுரை TN Assembly Deputy Speaker pichandi says all the students should eat small grain foods from now on and lead a healthy life in the future - TNN மாணவர்கள் இப்போது முதலே சிறுதானிய உணவுகளை உண்ணுங்கள் - துணை சபா நாயகர் பிச்சாண்டி அறிவுரை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/26/4a563e85f168a9bf2f214c9f3e5120521703601968257113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
திருவண்ணாமலை நகராட்சியில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையுடன் சிறுதானிய திருவிழாவானது நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலை காந்தி நகர் மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் இரண்டு உலக சாதனைகளை படைக்க திட்டமிடப்பட்டு அந்த சாதனையும் செய்து முடித்தனர். மேலும் 100 எண்ணிக்கையிலான சிறுதானிய மற்றும் இயற்கை முறையில் உணவு தயாரிக்கும் கடைகள் அமைக்கப்பட்ட அங்கங்களை சட்ட பேரவை துணை தலைவர் கு.பிச்சாண்டி மற்றும் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் உள்ளிட்டவர்கள் பார்வையிடும், அங்கு வைக்கப்பட்ட சிறுதானியங்களால் செய்யப்பட்டு இருந்த உணவுகளை அருந்தினர்.
பின்னர் தமிழ்நாடு சட்டப்பேரவை துணைதலைவர் கு.பிச்சாண்டி பேசியதாவது: சிறுதானிய நூற்றாண்டு விழாவானது பொது மக்களிடையே சிறு தானியத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அனைவரும் தங்கள் அன்றாட வாழ்வில் சிறுதானியத்தை உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சி பொறுப்புக்கு வந்ததிலிருந்து வேளாண்மை துறைக்கு பல்வேறு திட்டங்களை அளித்து செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாட்டில் கர்ப்பிணி, தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தான உணவு கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் பல்வேறு திட்டங்கள்
செயல்படுத்தப்பட்டு வருகிறது. குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாடு சிறப்பாக செயலாற்றி வருகிறது. பள்ளி மாணவர்கள் அனைவரும் தங்களது சிறு வயது முதலே சிறுதானிய உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். உணவு தயாரிப்பாளர்கள் சிறுதானியத்தை வைத்து காலத்திற்கு ஏற்றாற் போல் சுவை மிகுந்த உணவுகளை தயாரிக்க வேண்டும். சிறுதானியங்களில் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் நிறைந்துள்ளது. மாணவர்கள் அனைவரும் இப்பொழுது முதலே சிறுதானிய உணவுகளை உண்டு எதிர்காலத்தில் ஆரோக்கியமான வாழ்வை வாழ வேண்டும். இவ்வாறு பேசினார்.
மேலும் கிரிவலப்பாதையில் 246 அன்னதான கூடம் அமைத்து முறையான பயிற்சி அளித்து சான்று வழங்கி 23 இலட்சத்து 95 ஆயிரம் நபர்களுக்கு முறையாக அன்னதானம் வழங்கி சாதனை செய்ததற்காகவும் 78 அன்னதான கூடம் சிறுதானிய உணவு வழங்குவதற்கு முறையான பயிற்சி அளிக்கப்பட்டு 9 இலட்சத்து 30 ஆயிரம் நபர்களுக்கு உணவு வழங்கி உலக சாதனை படைத்தற்காகவும், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் 25 நிமிடத்தில் 347 சிறுதானிய உணவு பொருட்கள் தயாரிக்கப்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது. 15 அடி உயரத்தில் இந்திய வரைப்படம் உருவாக்கி அந்தந்த மாநிலத்தில் உற்பத்தியாகும் சிறுதானிய பொருட்களை கொண்டு இந்திய வரைப்படம் உருவாக்கியதற்காகவும் பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கத்தினை தமிழ்நாடு சட்டப்பேரவை துணைதலைவர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ், அரசு அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனர். மேலும் இந்த நிகழ்வில் ஏராளமான பள்ளி , கல்லூரி மாணவர்கள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)