பொண்டாட்டி சோறு போடல! அப்பானு கூட பாக்கல! மிரட்டிய மகள்கள்! ரூ. 4 கோடி மதிப்புள்ள பத்திரத்தை கோயில் உண்டியலில் போட்ட தந்தை!
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கோவில் உண்டியலில் வீட்டு பத்திரம் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே மகள்கள் சொத்து கேட்டு மிரட்டியதால், சொத்து பத்திரத்தை கோவில் உண்டியலில் போட்ட தந்தை, விரைவில் கோவிலுக்கு சொத்துக்களை எழுதி தரப் போவதாகவும் அறிவிப்பு.
உண்டியலில் கிடைத்த வீட்டு பத்திரம்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி ரேணுகாம்பாள் கோவிலில் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. அப்போது உண்டியலில் 4 கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரம் இருந்தது கண்டு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பத்திரத்தை பார்த்தபோது, அதில் மனப்பூர்வமாக கோவிலுக்கு எழுதிக் கொடுப்பதாக பின்னால் எழுதியிருந்தது.
இதனைத் தொடர்ந்து பத்திரத்தின் உரிமையாளரை தொடர்பு கொண்டு விசாரித்தனர். அப்போது அவர் திருவண்ணாமலை ஆரணி அடுத்த கோவில் அருகே இருக்கும் பகுதியை சேர்ந்த ராணுவ வீரர் விஜயன் என்பது தெரிய வந்தது. சொத்துக்காக மகள்கள் தன்னை மிரட்டியதால், தான் சம்பாதித்த சொத்தை கோவிலுக்கு கொடுக்க முடிவெடுத்துள்ளார்.
ரூபாய் 4 கோடி மதிப்பு
இதனைத் தொடர்ந்து கோவில் உண்டியலில் தனது இரண்டு வீட்டின் சொத்து பத்திரங்களை போட்டுள்ளார். இதன் மதிப்பு ரூ.4 கோடி என அவர் தெரிவித்துள்ளார். இதுபோன்று, உண்டியலில் போடப்படும் பத்திரம் செல்லாது முறையாக பத்திரப்பதிவு செய்து தர வேண்டும் என தெரிவித்துள்ளனர். இதற்கு சம்மதம் தெரிவித்த அவர் விரைவில் பத்திர பதிவு செய்து தருவதாக தெரிவித்துள்ளார்.
ஆட்களை வைத்து மிரட்டினார்கள்
இதுகுறித்து விஜயன் கூறுகையில், “என்னுடைய மகள்கள் என்னை அப்பா என்று கூப்பிட்டது கிடையாது. என்னை அடிப்பதற்கு 15 பேர் ஆட்களை கூப்பிட்டு கொண்டு வந்து விட்டார்கள். அப்போது என் மகள்களிடம் குடும்ப விஷயத்தை ஏன் வெளியில் சொல்லிக் கொண்டிருக்கிறாய், என கேட்டேன்.
என்னை சண்டை போடு என்று கூறினார்கள், எனக்கு 60 வயது ஆகிவிட்டது ராணுவ வீரர் என்பதால் என்னால் சண்டை போட முடியுமா என்ன?. மகள்கள் என்னுடன் சண்டை போடு என தெரிவித்தார். அப்போதே எனக்கு புரிந்து விட்டது, சண்டை போட தான் வந்திருக்கிறார்கள் என, சின்ன மகளும் என்னை, அப்பா இல்லை என்று சொல்லிவிட்டார். 2 பேருக்கும் நான் அப்பா இல்லை என்ற போது உங்களுக்கு சொத்து தர முடியாது என சொல்லிவிட்டேன்.
பொண்டாட்டி சோறு போடல
25 வருடங்களாக பொண்டாட்டியும் எனக்கு சோறு போடவில்லை. நீங்களும் என்னை அப்பா என்று சொன்னது கிடையாது, என்னுடைய சொத்தை கோவிலுக்கு போட்டு விடுகிறேன் என என் மனதில் நினைத்துக் கொண்டேன். பத்திரத்தை எடுத்துக்கொண்டு கோவில் உண்டியலில் போட்டுவிட்டேன்.
என்னுடைய 2 வீட்டின் டாக்குமெண்ட்டையும் போட்டு விட்டேன். மொத்தம் இரண்டு வீட்டை சேர்ந்து நான்கு கோடி ரூபாய் மதிப்பு இருக்கும். நான் கோவில் உண்டியலில் போட்ட பத்திரத்தில், மனப்பூர்வமாக இந்த சொத்தை கோயிலுக்கு தருகிறேன் என எழுதி கையெழுத்து போட்டு கொடுத்து விட்டேன்.
கோவிலில் ரெஜிஸ்ட்ரேஷன் பண்ணி கொடுத்தால் மட்டுமே எடுத்துக் கொள்வார்கள் என சொன்னார்கள். நானும் ரெஜிஸ்ட்ரேஷன் பண்ணி கொடுக்கிறேன் என சொல்லிவிட்டேன். எனக்கு நான் தானமாக கொடுத்தது அம்மனுக்கு தான் போய் சேர வேண்டும். அம்மனுக்கு காணிக்கையாக கொடுப்பதற்கு நான் உறுதியாக இருக்கிறேன். இது பூர்விக சொத்து கிடையாது, இது அனைத்தும் நானே சம்பாதித்து சொத்து” எனத் தெரிவித்தார்.






















