தொடர் விடுமுறையால் திருவண்ணாமலை கோயிலில் அலைமோதிய பக்தர்கள்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் 8 மணி நேரத்திற்கு மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை (Tiruvannamalai News) நினைத்தாலே முக்தி தரும் தலமாகவும் உலக பிரசித்தி பெற்ற ஸ்தலங்களில் ஒன்றாக கருதக் கூடியதுமான அண்ணாமலையார் திருக்கோயிலில் நாளுக்கு நாள் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இவ்வாறு திருவண்ணாமலை நோக்கி வருபவர்கள் 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவல பாதையில் இரவு மற்றும் பகல் நேரங்களில் கிரிவலம் வந்தும் அண்ணாமலையார் திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்வது வழக்கம். திருவண்ணாமலை நகரில் உள்ள அண்ணாமலையார் திருக்கோயிலில் ராஜகோபுரம் வழியாக அனுமதிக்கப்படும் பக்தர்கள் நீண்ட வரிசையில் 4 முதல் 6 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்வதற்காக திருக்கோவில் ஊழியர்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு பக்தர்களை நேர்வழியில் செல்வதற்காக அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
கோயில் ஊழியருக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம்
அண்ணாமலையார் திருக்கோவில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு அது மட்டுமின்றி விடுமுறை காலங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நாளில் கோவிலில் குவிவதால் செய்வதறியாது தவிக்கும் கோவில் நிர்வாகத்தினர் பக்தர்களின் வசதிக்காக ஆங்காங்கே குடிநீர் வசதி, வரிசையில் செல்லும் பக்தர்கள் இளைப்பாரி கொள்ளும் வகையிலும் பல்வேறு ஏற்பாடுகளை கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர். இந்நிலையில் தொடர்ச்சியாக விடுமுறை தினம் என்பதால் நேற்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கூட்டம் நெரிசல் காணப்பட்டது. இதனை திருக்கோவில் ஊழியர் ஆனந்த் என்பவர் சரி செய்து கொண்டிருக்கும் வேளையில் பக்தர் ஒருவருக்கும் கோவில் ஊழியர் ஆனந்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும், இதில் பக்தர் கோவில் ஊழியரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த காவல்துறை சிறப்பு ஆய்வாளர் பிரகாஷ் என்பவர் கோவில் ஊழியர் ஆனந்தை ஒருமையில் பேசியதாகவும் தரக்குறைவாக பேசியதாகவும் கூறப்படுகிறது. அதே வேளையில் இன்று காலை முதல் சிறப்பு ஆய்வாளர் பிரகாஷ் கோவில் ஊழியர்களை பல்வேறு இடங்களில் தரக்குறைவாக பேசியதாகவும் குற்றம் சாட்டும் கோவில் ஊழியர்கள்,
காவல்துறையினர் கால் மணி நேரத்தில் சாமி தரிசனம்
பக்தர்களின் பாதுகாப்பிற்காக பணி செய்ய வேண்டிய காவல்துறையினர் காவல்துறையினருக்கு வேண்டப்பட்ட உறவினர்களையும், நண்பர்களையும் அவ்வப்போது அழைத்துக் கொண்டு வந்து வரிசையில் நிற்காமல் குறுக்கு வழியில் செல்வதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர், அதே வேளையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பிரகாஷ் கோவில் ஊழியரை தரக்குறைவாக பேசியதால் ஆத்திரம் அடைந்த கோவில் ஊழியர்கள் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அண்ணாமலையார் கோவிலின் இராஜ கோபுரம் அம்மணி அம்மன், திருமஞ்சன கோபுரம், பே கோபுரம் ஆகிய நான்கு கோபுர நுழைவாயிலும் நின்று கொண்டு காவல்துறையினர் அவர்களுக்கு வேண்டப்பட்டவர்களை மட்டும் உள்ளே அழைத்துக் கொண்டு குறுக்கு வழியில் சாமி தரிசனம் காண்பித்து வருகின்றனர், பக்தர்கள் 8 மணி நேரத்திற்கு மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து நிலையில் காவல்துறையினர் கால் மணி நேரத்தில் சாமி தரிசனம் பார்த்துவிட்டு செல்வது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.