பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
மேற்குவங்கத்தில் நடுரோட்டில் வைத்து பெண் ஒருவர் கடுமையாக தாக்கப்படுகிறார். மக்கள் மத்தியில் அந்த பெண்ணை குச்சிகளை கொண்டு ஒருவர் தாக்குகிறார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்குவங்கத்தில் பெண் ஒருவரை நடுரோட்டில் வைத்து கடுமையாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் கூட்டத்திற்கு மத்தியில் அந்த பெண்ணை தடியை கொண்டு ஒருவர் தாக்குகிறார். அதை தட்டி கேட்காமல் கூடியிருந்த மக்கள் அமைதி காக்கின்றனர்.
வீடியோவில், சிறு கூட்டம் அமைதியாகப் பார்த்துக்கொண்டிருக்கும்போது, ஒரு ஆண் ஒரு பெண்ணை மீண்டும் மீண்டும் தடியை கொண்டு அடிப்பதைக் காணலாம். அவர் வலியால் கத்துகிறார். ஆனால், அந்த நபர் தொடர்ந்து தாக்குகிறார்.
அதிர்ச்சியை ஏற்படுத்தும் சம்பவம்:
பின்னர், திரும்பி மற்றொரு நபரை அடிக்கத் தொடங்குகிறார். இதை கூடி நின்று பார்ப்பவர்கள், தாக்குதலை நிறுத்த முயற்சிப்பதற்குப் பதிலாக, தாக்கியவருக்கு உதவுவது போல் தெரிகிறது. ஒரு கட்டத்தில், அந்த ஆண் பெண்ணின் தலைமுடியைப் பிடித்து உதைக்கிறார்.
அதிர்ச்சியூட்டும் இந்த சம்பவத்தின் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. வடக்கு வங்கம் உத்தர் தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள சோப்ராவில் இந்த சம்பவம் நடந்ததாக எதிர்க்கட்சிகள் கூறியுள்ளனர்.
இந்த வாரத்தில்தான் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. இந்த வீடியோவின் உண்மைத்தன்மையை உறுதி செய்ய முடியவில்லை. பெண்ணை தாக்குபவர் உள்ளூரில் செல்வாக்குமிக்க நபராக கருதப்படும் தஜேமுல் என கூறப்படுகிறது. அவருக்கு ஆளும் திரிணாமுல் கட்சியுடன் தொடர்பு உள்ளதாக குற்றம்சாட்டப்படுகிறது.
நடந்தது என்ன?
உள்ளூர் மட்டத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்து வருவதாக தஜேமுல் மீது புகார் உள்ளது. அந்த ஆணும் பெண்ணும் ஏன் தாக்கப்பட்டனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இதுகுறித்து உள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக திரிணாமுல் அரசு இன்னும் விளக்கம் அளிக்கவில்லை. இந்த விவகாரத்தை முன்வைத்து ஆளுங்கட்சியான மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் மீது பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறது.
Not even #KangarooCourt ! Summary trial and punishment handed out by d @AITCofficial goon nicknamed JCB.
— Md Salim (@salimdotcomrade) June 30, 2024
Literally bulldozer justice at Chopra under @MamataOfficial rule. pic.twitter.com/TwJEThOUhi
மேற்குவங்க மாநிலத்தின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் முகமது சலீம் இதுகுறித்து குறிப்பிடுகையில், "இது கட்டப்பஞ்சாயத்தாக கூட தெரியவில்லை. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஜேசிபி என்ற புனைப்பெயர் கொண்ட குண்டரால் மேலோட்டமாக விசாரணை நடத்தப்பட்டு தண்டனை வழங்கப்படுகிறது. மம்தா ஆட்சியில் சோப்ராவில் புல்டோசர் நீதி வழங்கப்படுகிறது" என எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.