CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Chief of the Army Staff General Upendra Dwivedi: இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக, ஜெனரல் உபேந்திர திவேதி பொறுப்பேற்றார்.
ஜெனரல் மனோஜ் பாண்டேவிடமிருந்து ஜெனரல் உபேந்திர திவேதி ராணுவ தலைமைத் தளபதி பொறுப்பை ஏற்றுக் கொண்டார். 30-வது ராணுவத் தலைமைத் தளபதியாக ஜெனரல் உபேந்திர திவேதி இன்று (30 ஜூன் 2024) பொறுப்பேற்றார்.
ஜெனரல் உபேந்திர திவேதி
ஜெனரல் உபேந்திர திவேதி 40 ஆண்டுகள் ஆயுதப் படைகளில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். ரேவா சைனிக் பள்ளியின் முன்னாள் மாணவரான இவர், 1984-ல் ஜம்மு காஷ்மீர் ரைபிள்ஸ் படைப்பிரிவில் சேர்ந்தார். வடக்கு, கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில், மாறுபட்ட செயல்பாட்டு சூழலில், தனித்துவமான பணிகளை அவர் மேற்கொண்டுள்ளார்.
ஜெனரல் திவேதி பாதுகாப்பு களத்தில் நவீன தொழில்நுட்பங்களைப் பற்றிய ஆழமான புரிதலைக் கொண்டுள்ளவர் ஆவார். செயல்திறனை மேம்படுத்த ராணுவ அமைப்புகளில் அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கும் ஒருங்கிணைப்பதற்கும் சிறந்த அணுகுமுறைகளை அவர் கொண்டுள்ளார்
மனோஜ் பாண்டே ஓய்வு:
40 ஆண்டுகளுக்கும் மேலாக ராணுவத்தில் சிறப்பாகச் சேவையாற்றிய ஜெனரல் மனோஜ் பாண்டே இன்று ஓய்வு பெற்றார். ராணுவ தலைமைத் தளபதியாக உயர்ந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில் அவரது பதவிக்காலம் சிறந்த போர் தயார்நிலையை உறுதி செய்துள்ளது. மாற்றத்திற்கான செயல்முறைக்கு உத்வேகம் அளித்தல் மற்றும் தற்சார்பு முன்முயற்சிகளை நோக்கிய அவரது செயல்பாடுகள் எப்போதும் நினைவுகூரப்படும். ஜெனரல் மனோஜ் பாண்டே, ராணுவ தலைமைத் தளபதி என்ற முறையில் வடக்கு மற்றும் மேற்கு எல்லைகளில் செயல்பாட்டுத் தயார்நிலைக்கு அதிக முன்னுரிமை அளித்தார்.
ஜம்மு-காஷ்மீர், கிழக்கு லடாக் மற்றும் வடகிழக்கில் உள்ள பகுதிகளுக்கு அவர் அடிக்கடி சென்று ஆய்வு மேற்கொண்டார். தற்சார்பு முன்முயற்சியின் கீழ் உள்நாட்டு ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை வடிவமைத்து கொள்முதல் செய்வதற்கு அவர் அளித்த முக்கியத்துவம் இந்திய ராணுவத்தின் நீண்டகால நிலைத் தன்மைக்கு வழி வகுத்தது. மனிதவள மேம்பாட்டு முன்முயற்சிகளுக்கும் அவர் உத்வேகம் அளித்தார். இது பணியில் உள்ள வீரர்கள், அவர்களது குடும்பத்தினரின் வாழ்க்கையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியது. ராணுவ தலைமைத் தளபதி என்ற முறையில் பயிற்சிகள், கருத்தரங்குகள் மற்றும் விவாதங்களை அவர் ஊக்குவித்தார். அவரது சிறந்த சேவைக்காக, பரம் விஷிஷ்ட் சேவா பதக்கம், அதி விஷிஷ்ட் சேவா பதக்கம் மற்றும் விஷிஷ்ட் சேவா பதக்கம் ஆகியவை அவருக்கு வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் மனோஜ் பாண்டே ஓய்வுப் பெற்ற நிலையில், ராணுவ தலைமை தளபதியாக உபேந்திர திவேதி பொறுப்பேற்றுக் கொண்டார்.