மேல்மா பகுதி விவசாயிகள் விவகாரம்; தி.மலை ஆட்சியர், போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க மனித உரிமைப் காப்பாளர் கூட்டமைப்பு வலியுறுத்தல்
சமூகநீதி பேசும் திமுக அரசு இது போன்ற பாகுபாட்டினை காட்டும் என்பதனை மனித உரிமைக் காப்பாளர்கள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.
திருவண்ணாமலை (Tiruvannamalai News): ‘‘உரிமைக்காகப் போராடிய மேல்மா பகுதி விவசாயிகள் மீது தவறான நடவடிக்கை எடுத்த திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆட்சியரின் சொந்தப் பணத்தில் இழப்பீடு வழங்க வேண்டும். பொய் வழக்குகள் பதிவு செய்த காவல்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனித உரிமைக் காப்பாளர் கூட்டமைப்பின் தேசியச் செயலாளர் ஹென்றி திபேன், தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது: திருவண்ணாமலை மாவட்டம் மேல்மா சிப்காட் பணிக்காக, விவசாய நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்ததற்காக போராடிய 50 க்கும் மேற்பட்ட விவசாயிகள் மீது பொய்யான வழக்குகளைப் பதிவு செய்ததோடு, குறிப்பாக 7 விவசாயிகள் மீது குண்டாஸ் சட்டத்தின் கீழ் 2023 நவம்பர் மாதம் தமிழ்நாடு அரசு வழக்குப் பதிவு செய்தது. பின்னர் சிறிது நாட்களில் 6 நபர்கள் மீதான குண்டாஸ் வழக்கினை ரத்து செய்தது தமிழ்நாடு அரசு. ஆனால் கடந்த ஆட்சியில் 8 வழிச்சாலை திட்டதிற்கு எதிராக தற்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களோடு இணைந்து போராடிய விவசாயி அருள் என்பவர் மீதான குண்டாஸ் வழக்கு மட்டும் ரத்து செய்யப்படவில்லை.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, (04.01.2024) அன்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது விவசாயி அருள் மீதான குண்டாஸ் வழக்கை ரத்து செய்வதாக தமிழ்நாடு அரசு தெரிவித்த நிலையில், (05.01.2024) அன்று அவ்வழக்கு திரும்பப் பெறப்பட்டுள்ளது. விவசாயி அருள் மீதான குண்டாஸ் வழக்கினை ரத்து செய்து உத்தரவிட்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு, மனித உரிமைக் காப்பாளர் கூட்டமைப்பு நன்றி தெரிவித்துக் கொள்கிறது. நன்றி தெரிவிக்கும் இவ்வேளையில், தமிழ்நாடு அரசும், அரசு அதிகாரிகளும் விவசாயிகள் மீது பாகுபாட்டோடு நடந்து கொண்டதை இவ்வழக்கு எடுத்துக் காட்டுகிறது.
சமூகநீதி பேசும் திமுக அரசு இது போன்ற பாகுபாட்டினை காட்டும் என்பதனை மனித உரிமைக் காப்பாளர்கள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. "உரிமைக்காக போராடிய விவசாயிகள் மீதான தவறான நடவடிக்கைக்கு காரணமாக இருந்த திருவண்ணமாலை மாவட்ட ஆட்சியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும், மாவட்ட ஆட்சியரின் சொந்த பணத்தில் இழப்பீட்டுத் தொகையும், பின்புலமாக பொய்வழக்குகள் பதிவு செய்ய காரணமாக இருந்த காவல்துறை அதிகாரிகள் மீது எடுக்க வேண்டும், அனைத்து விவசாயிகள் மீதான பொய் வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு முதல்வர் அவர்களை மனித உரிமைக் காப்பாளர் கூட்டமைப்பு வலியுறுத்துகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.