“போட்டிகள் நிறைந்த உலகம்; வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ளுங்கள்” - அமைச்சர் கீதா ஜீவன்
தமிழகத்திலேயே அதிக அளவு சுதந்திர போராட்ட வீரர்கள் நிறைந்த மாவட்டங்கள் புதுக்கோட்டை, ஈரோடு மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள் தான். தூத்துக்குடி மாவட்டத்தில் 408 சுதந்திர போராட்ட வீரர்கள்.
பெற்ற சுதந்திரத்தை பேணிக் காக்கப்போகும் நாளைய தலைவர்கள் மாணவர்கள் தான். எனவே, சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்களை மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்-அமைச்சர் கீதாஜீவன்.
மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய மக்கள் தொடர்பகத்தின் சென்னை அலுவலகம் சார்பில் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் குறித்த 5 நாள் புகைப்பட மற்றும் டிஜிட்டல் கண்காட்சி தூத்துக்குடி வஉசி கல்லூரி கலையரங்கில் நடைபெறுகிறது. இதன் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. மத்திய மக்கள் தொடர்பகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் அண்ணாதுரை தலைமை வகித்தார்கள். விளம்பர அலுவலர் தேவி பத்மநாபன் வரவேற்றார்.தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன், ஆணையர் சாருஸ்ரீ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்து, பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசும்போது, ”தமிழகத்திலேயே அதிக அளவு சுதந்திர போராட்ட வீரர்கள் நிறைந்த மாவட்டங்கள் புதுக்கோட்டை, ஈரோடு மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள் தான். தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 408 சுதந்திர போராட்ட வீரர்கள் வாழ்ந்ததாக அரசிதழில் உள்ளது.அவர்களில் நிறைய பேரின் புகைப்படங்கள் மற்றும் விபரங்கள் இங்கே இடம் பெற்றிருக்கிறது. தூத்துக்குடி நடைபெற்ற புத்தக கண்காட்சியின் போது மாவட்ட நிர்வாகம் சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த அறியப்படாத தியாகிகள் குறித்து ஒரு புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தை அனைவரும் படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
போட்டி நிறைந்த இன்றைய உலகத்தில் மாணவ, மாணவிகள் கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்தி அறிவாற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும். மாணவர் பருவத்தில் தான் உங்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும். எந்த பொறுப்புகளும் கிடையாது, கவலைகளும் கிடையாது. அனைத்தையும் பெற்றோர் பார்த்துக் கொள்வார்கள். எனவே, இந்த காலத்தில் தான் நீங்கள் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்.எந்த வாய்ப்பு கிடைத்தாலும் அதனை பயன்படுத்தி கற்றுக் கொள்ள வேண்டும். தட்டச்சு, கணினி, கைத்தொழில் என எந்த வாய்ப்பு கிடைத்தாலும் அதனை கற்றுக் கொள்ள வேண்டும். அதன் மூலம் அறிவாற்றலை வளர்த்துக் கொள்ள முடியும். பல தடைகள், சோதனைகள் வரலாம். தடைகற்களை படிகற்களாகவும், சோதனைகளை சாதனைகளாகவும் மாற்ற வேண்டும். மாணவர்கள் சிந்தித்து நல்ல முடிவை எடுக்க வேண்டும். உங்களுக்கு பிடித்த துறையை தேர்வு செய்து படியுங்கள், பாடங்களை புரிந்து படிக்க வேண்டும். பாட புத்தகங்களை தாண்டி அதிக புத்தகங்களை படிக்க வேண்டும். செய்தித்தாள்களை படிக்க வேண்டும். அது உங்களது அறிவாற்றலை, சிந்திக்கும் திறனை வளர்க்கும். போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள பயனுள்ளதாக இருக்கும்.
சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை நீங்கள் தெரிந்துகொள்வதோடு மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும். கடந்து வந்த பாதையை தெரிந்து கொள்ள வேண்டும். எத்தனையோ தலைவர்கள் சிறைபட்டு, உயிர்நீத்து கஷ்டப்பட்டு சுதந்திரத்தை வாங்கித் தந்துள்ளனர். அதனை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில் பெற்ற சுதந்திரத்தை பேணிக் காக்கப்போகும் நாளைய தலைவர்கள் நீங்கள் தான்” என்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசும்போது, ”தமிழகத்தில் அதிக சுதந்திர போராட்ட வீரர்களை கொண்ட மாவட்டம் என்பதில் நாம் பெருமை கொள்வோம். சுதந்திர போராட்ட வீரர்களை பற்றி மாணவர்கள் அறிந்து கொள்வது அவசியம். ஒரே நாளில் யாரும் சாதனையாளராக மாறிவிட வேண்டும். சாதனையாளராக வேண்டுமானால் கடினமாக உழைக்க வேண்டும். நாம் எந்த துறைக்கு செல்ல வேண்டும் என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும். தோல்விகளை கண்டு துவண்டு விடக்கூடாது” என்றார் ஆட்சியர்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி சார் ஆட்சியர் கவுரவ்குமார், வஉசி கல்லூரி முதல்வர் வீரபாகு, மாவட்ட சமூகநல அலுவலர் ரதிதேவி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மாவட்ட அலுவலர் .சரஸ்வதி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.