காற்றாலை மின் உற்பத்தி: ஒரு மாதத்திற்கு பின் தமிழகத்தில் இன்று 4 ஆயிரம் மெகாவாட்டை தாண்டியது
காற்றின் வேகம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஒரு மாதத்திற்கு பிறகு மீண்டும் 4000 மெகாவாட்டிற்கு மேல் காற்றாலை மின் உற்பத்தி எட்டியது.
கடந்த ஒரு மாதமாக 3000 மெகாவாட்டிற்கும் கீழ் மின் காற்றாலை மின் உற்பத்தி செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று ஒட்டு மொத்தமாக 4084 மெகாவாட் மின் உற்பத்தி ஆகி இருக்கிறது. காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுவதால் தமிழகத்தில் இன்றைய ஒட்டுமொத்த காற்றாலை மின் உற்பத்தி 4084 மெகாவாட்டை எட்டியது.
தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக தமிழகத்தில் 13 ஆயிரத்திற்கும் அதிகமான காற்றாலைகள் உள்ளது. தமிழகத்தின் மின் தேவை நாள் ஒன்றிற்கு 21,000 மெகாவாட்டிற்கும் அதிகமாக தேவை என்ற நிலையில் சீசன் காலங்களில் காற்றாலை மின் உற்பத்தி ஓரளவிற்கு கை கொடுக்கிறது. அதுவும் மே மாதம் முதல் அக்டோபர் வரை காற்று சீசன் காலம் என்பதால் இந்த காலகட்டத்தில் 5000 மெகாவாட் வரை காற்றாலை மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.
குறிப்பாக தென் மாவட்டங்களான நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் 10,000க்கும் அதிகமான காற்றலைகள் நிறுவப்பட்டு மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. கடந்த மே மாதம் காற்றாலை சீசன் துவங்கிய நிலையில் நாள் ஒன்றிற்கு 3000 மெகாவாட்டிற்கும் குறைவாகவே மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. தற்போது தென்மேற்கு காற்று பலமாக வீசி வருவதால் காற்றாலை மின் உற்பத்தி கணிசமாக உயர்ந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி தமிழகத்தின் ஒட்டு மொத்த காற்றாலை மின் உற்பத்தி 4084 மெகாவாட்டை எட்டியுள்ளது. மேலும் காற்றின் வேகம் கூடும் நிலையில் மின்சார உற்பத்தியும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பால் பல்வேறு இடங்களில் மின் தட்டுப்பாடு தவிர்க்கப்பட்டுள்ளதாக மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை மாதங்களில் மின் உற்பத்தி 5 ஆயிரம் மெகாவாட்டை தாண்டும் என்று நிலையில் தற்போது காற்றின் வேகம் அதிகரித்திருப்பதால் மின் உற்பத்தி 4 ஆயிரத்தை தாண்டி உள்ளது. விரைவில் 5 ஆயிரம் மெகா வாட்டாக உயரும் என்றும் கூறப்படுகிறது.