தொடரும் வன்மம்! முன்பே காவல்துறையை அலெர்ட் செய்த ஜேக்கப் காதலி! என்ன நடந்தது?
”தீபக் ராஜா கொலை லிஸ்ட்டில் முதலில் இருக்கிறார் என காவல்துறைக்கு முன்பே எச்சரிக்கை விடுத்த ஜேக்கப் காதலி”
யார் இந்த தீபக் ராஜா?
நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே வாகைக்குளத்தை சேர்ந்தவர் தீபக் ராஜா. 32 வயது இளைஞரான இவர் தனது சமுதாயத்தின் மீதும், தனது சமுதாய தலைவர்களின் மீதும் மிகுந்த பற்றுள்ளவராக இருந்துள்ளார். தனது சமூக மக்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றாலும் சமுதாய நபர்கள் இறந்தாலும் அவர்களுக்காக குரல் கொடுத்து வந்துள்ளார். 2012 ஆம் ஆண்டு கொல்லப்பட்ட பசுபதி பாண்டியனின் தீவிர ஆதரவாளராகவும் இருந்துள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற இரட்டை கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக தீபக் ராஜா பெயர் இருந்த நிலையில் நெல்லை பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதி முத்துமனோ கொலை செய்யப்பட்டதற்கு பழிக்குப் பழியாக தாழையூத்தை சேர்ந்த கண்ணன் என்பவரை கொலை செய்த வழக்கிலும் தீபக் ராஜா குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இதே போல தீபக் ராஜா மீது திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, தஞ்சாவூர் என பல்வேறு மாவட்டங்களில் 5 கொலை, அடிதடி உள்ளிட்ட 23 வழக்குகள் என பல்வேறு வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது. பசுபதி பாண்டியனை கொலை செய்ததாக கூறப்படும் நபரை கொலை செய்த சம்பவத்திலும் தீபக் ராஜா முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டார். அதன் பின் அவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. சட்டம் படித்த தீபக் ராஜா குண்டர் தடுப்புச் சட்டத்தில் தன்னை கைது செய்தது தவறு என நீதிமன்றத்தில் வழக்காடி வெற்றி பெற்று மற்ற வழக்குகளிலும் ஜாமின் பெற்று சென்னை, கோவை ஆகிய இடங்களில் தங்கியிருந்துள்ளார்.
மேலும் தனது சமுதாய மக்களுக்காக குரல் கொடுத்து சமூக வலைத்தலங்களில் தீபக் ராஜா பேசும் வீடியோக்களும் வேகமாக பரவி வருகிறது. சென்னையில் இருந்த போது சவுக்கு சங்கர் உள்ளிட்டோரை தொடர்பு கொண்டு பேசி அவர்களுடன் தொடர்பில் இருந்ததாகவும் கூறப்படும் நிலையில் சவுக்கு சங்கரும் தீபக் ராஜா குறித்து பேசி சமூக வலைதலங்களில் வீடியோ வெளியிட்டுள்ளார். பல ஆண்டு காலமாக பசுபதிபாண்டியன் தரப்பினர், சுபாஷ் பண்ணையார் தரப்பினர் என நீடிக்கும் படுகொலை சரித்திரத்தில் பல உயிர்கள் மடியும் சம்பவம் நிகழ்ந்த வண்ணமே உள்ளது. அதன் தொடர்ச்சியாகவே தீபக் ராஜாவின் படுகொலையையும் அரங்கேறியுள்ளதாக சொல்லப்படுகிறது.
தீபக் ராஜா படுகொலை:
இந்த நிலையில் தான் நெல்லை மாநகரத்தின் எல்லை பகுதியான கேடிசி நகரில் அமைந்துள்ள பிரபல உணவகத்தில் கடந்த 20 ஆம் தேதி தனது காதலியுடன் உணவருந்த சென்ற நிலையில் காதலி கண்முன்னே 6 பேர் கொண்ட மர்ம கும்பல் அரிவாளால் வெட்டி சாய்த்தது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே நெல்லை மாநகர காவல் துறை துணை ஆணையாளர் ஆதர்ஸ் பச்சோரா தலைமையில் ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணி தீவிரமடைந்துள்ள நிலையில் தற்போது 5 பேரை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் குற்றவாளிகளை கைது செய்யாமல் உடலை வாங்க மாட்டோம் என இரண்டாவது நாளாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முன்பே காவல்துறைக்கு எச்சரிக்கை விடுத்த ஜேக்கப் காதலி:
கடந்த ஜனவரி மாதம் ரவுடி பிளாக் ஜேக்குவார் என்ற ஜேக்கப்பின் காதலி என பெண் ஒருவர் பேசிய ஆடியோவும், இன்ஸ்டாகிராமில் இட்ட பதிவும் தற்போது பேசுப்பொருளாகியுள்ளது. அதில் நெல்லை காவல்துறைக்கு ஒரு அன்பான வேண்டுகோள். நான் ஜேக்கப்பின் லவ்வர். ஜேக்கப் இனிமேல் எதுவும் செய்யமாட்டேன். திருந்தி வாழ்வேன் என்றார். ஆனால் கடைசியில் இறந்தது என்னுடைய மச்சான் என்பதால் அதை நான் விடமாட்டேன். பழிக்குப்பழி வாங்குவேன் என சுற்றிக்கொண்டு இருக்கிறார். அமைதியாக போய்க்கொண்டு இருக்கும் திருநெல்வேலியில் எதுவும் பிரச்சினை வரக்கூடாது என்பதால் உடனே நடவடிக்கை எடுங்க. எனக்கும் மிரட்டல் வருகிறது. நிச்சயமாக இதை நீங்கள் தடுத்து நிறுத்தியே ஆக வேண்டும் என்று ஆடியோ வெளியிட்டதுடன், இன்ஸ்டாகிராமில் அவர் சென்னையில் சமுதாயத்தை தாண்டி பல கொலைக்கு ரூட்டு போட்டுட்டாரு, அதுக்கு மேல நெல்லையில் அவருக்கு எதிரான தேவேந்திரகுலத்தை சேர்ந்த முக்கிய புள்ளிகளான தீபக் ராஜா பாண்டியன், ஊசி பாண்டியன், அதிசய பாண்டியனை இன்னும் ஒரு மாதத்திற்குள் கொன்று தன்னுடைய கால் பதித்த இடத்தை தமிழ்நாட்டுக்குள் நிலை நிறுத்த தன்னுடைய சமுதாயத்தை தாண்டி பல சமுதாயங்கள் மற்றும் பல பழைய ரவுடிகளை அணுகி அதற்கான அனைத்து விவரமும் செய்கிறார். இதை நீங்கள் காமெடியாக எடுத்துக் கொள்ள வேண்டாம். நாளை இந்த சம்பவங்கள் நடைபெற்றால் இதை காமெடியாக எடுத்துக் கொண்ட அனைத்து தமிழ் நாடு காவல்துறையும், தலை குனிந்து நிற்க வேண்டிய நிலைமை ஏற்படும் என்று பதிவிட்டிருந்தார். அவர் கூறியது போலவே தீபக் ராஜா தற்போது படுகொலை செய்யப்பட்டிருக்கும் நிலையில் அடுத்து ஊசி பாண்டியனா? என பல்வேறு கேள்விகள் எழுகிறது. ஆண்டு ஆண்டு காலமாக தொடர்ச்சியாக நிகழ்ந்து வரும் சமுதாய ரீதியிலான கொலைகளுக்கு முற்றுப்புள்ளி எப்போது........?