ஒரே நாளில் இரு காதல் ஜோடிகள் தஞ்சம் - காவல் நிலையம் காதல் நிலையமாக மாறிய சுவாரஸ்யம்
சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஒரே நாளில் "இரு காதல் ஜோடிகள்" தஞ்சம் அடைந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையம் ஆனது தந்தை - மகன் ஜெயராஜ் - பென்னிக்ஸ் படுகொலைக்கு பின்னர், மிகவும் பயங்கரமான ஒரு இடமாக மாறி பொதுமக்கள் அந்த வழியாக செல்வதற்கே அச்சமடைந்து இருந்த நிலையில், தற்போது சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இன்று ஒரே நாளில் "இரு காதல் ஜோடிகள்" தஞ்சம் அடைந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பேய்குளம் பகுதியை சேர்ந்த முத்துமாரி என்ற பெண்ணும் கருங்கடல் பகுதியை சேர்ந்த சாத்தராக் என்ற வாலிபரும் காதலித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த இருவரும் கடந்த 8-ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்று பதிவு திருமணம் செய்து கொண்டனர். மேலும் இது தொடர்பாக இருவரது குடும்பத்தினரும் காவல் நிலையத்தில் காணவில்லை என புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சாத்தான்குளம் போலீசார் புகாரை பதிவு செய்து இருவரையும் தேடி வந்த நிலையில் இன்று 12-ம் தேதி மாலையில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் காணாமல் போனதாக கூறப்படும் சாத்தராக் மற்றும் முத்துமாரி தம்பதியினர் திடீரென காவல் நிலையம் வந்து தங்கள் இருவருக்கும் பதிவு திருமணம் நடைபெற்றதாகவும், பின்னர் 4 நாட்கள் கழித்து காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளதாகவும் போலீசாரிடம் கூறினர்.
இதன் அடிப்படையில் போலீசார் இருவரின் குடும்பத்தினரையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி திருமணம் செய்த இருவரும் மேஜர் என்பதால் அவர்கள் விருப்பத்தின் பேரில் இருவரையும் அனுப்பி வைத்தனர்.
(மற்றொரு ஜோடி)
மேலும் பேய்குளம் பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜ் மற்றும் தேர்க்கன்குளம் பகுதியை சேர்ந்த சேர்மலட்சுமி என்ற இளம் பெண்ணும் காதலுக்கு வந்துள்ளனர். இந்த நிலையில் இவர்கள் இருவரும் கடந்த 8-ம் தேதி தங்களது வீட்டை விட்டு வெளியே சென்று உள்ளனர். அது குறித்து புகாரின் பேரில் சாத்தான்குளம் போலீசார் புகாரை பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனர்.
இந்த நிலையில் இந்த இருவரும் இன்று சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு வந்து பெற்றோருக்கு பயந்து காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். உடனே போலீசார் இரு தரப்பினரின் பெற்றோரை மற்றும் குடும்பத்தினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இருவரும் மேஜர் என்பதால் சாத்தான்குளம் போலீசார் அவர்கள் இருவருக்கும் அறிவுரை கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஒரே நாளில் இரண்டு காதல் ஜோடிகள் தஞ்சம் அடைந்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஒரு காலத்தில் கலவர நிலையமாக காட்சியளித்த சாத்தான்குளம் காவல் நிலையம் ஆனது தற்போது காவலர்களின் கனிவான நடவடிக்கையால் காவலர்கள் மேலிருந்த ஒரு பயம் மறைந்து பொதுமக்களின் நண்பனாக காவலர்கள் மாறி இருக்கிறார்கள் என பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.





















