ஸ்டெர்லைட் ஆலையில் ஜிப்சம் வேதியியல் கழிவுகளை வெளியேற்றுவது குறித்த ஆய்வு தொடக்கம்
ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஜிப்சம் வேதியியல் கழிவுகளை வெளியேற்றுவது குறித்த ஆய்வு தொடங்கி இருக்கிறது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு போராட்டம் நடந்தது. அப்போது நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக ஸ்டெர்லைட் நிறுவனம் மூடப்பட்டது. இந்த நிலையில் ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனுத்தாக்கல் செய்தது. இந்த மனுவை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து உத்தரவிட்டது. அந்த உத்தரவில், ஸ்டெர்லைட் ஆலையில் மீதம் உள்ள ஜிப்சத்தை அகற்றவும், ஆலையின் கழிவுக்குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறாமல் தடுப்பது, 4-வது கழிவுக்குழியில் கரை உடையாமல் தடுப்பதற்கான சீரமைப்பு பணிகளை மேற்கொள்வது, பசுமையை பராமரிப்பது, புதர்களை அகற்றுவதற்கு அனுமதி அளித்தது.
இதனை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் அறிக்கையை தயாரித்து அரசுக்கு அனுப்பி உள்ளார். அதனை தமிழக அரசு சார்பில் அபிடவிட்டாக கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதில் ஆலையில் மீதம் உள்ள ஜிப்சத்தை அகற்றவும், ஆலையின் கழிவுக்குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறாமல் தடுப்பது, 4-வது கழிவுக்குழியில் கரை உடையாமல் தடுப்பதற்கான சீரமைப்பு பணிகளை மேற்கொள்வது, பசுமையை பராமரிப்பது, புதர்களை அகற்றுவதற்கு உதவி கலெக்டர் தலைமையில் 9 பேர் கொண்ட உள்ளூர் மேலாண்மை குழு அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் ஆலை தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்ட சிவில் கட்டுமான பாதுகாப்பு உறுதித்தன்மை ஆய்வு மேற்கொள்வது, கருவிகள், உதிரி பாகங்களை வெளியில் கொண்டு செல்வது, பிற கச்சா பொருட்களையும், தொழிற்சாலை இயக்கத்தில் வெளியான பொருட்களையும் ஆலையில் இருந்து வெளியில் கொண்டு செல்வது ஆகியவற்றை செயல்படுத்துவது தொடர்பாக இறுதி தீர்ப்பு வந்த பிறகே முடிவு செய்ய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவுபடி ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை மாநில அரசே அகற்றிக் கொள்ளலாம் என அறிவுறுத்தியதின் பேரில் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் சார் ஆட்சியர் கௌரவ்குமார் தலைமையில் உள்ளூர் மேலாண்மை குழு நிர்வாகிகள் 9 பேர் ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு மேற்கொண்டனர். ஸ்டெர்லைட் ஆலையில் கடந்த 2018 முதல் 2022 ஆம் ஆண்டு வரை 14 வகையான அபாயகரமான கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது. அதன்படி சல்பூரிக் ஆசிட், பாஸ்போரிக் ஆசிட், பெட்ரோலிய வாயு, ஹைஸ்பீட் டீசல், பர்னஸ் ஆயில், திரவ ஆக்சிஜன் மற்றும் திரவ நைட்ரஜன் உட்பட 14 வகையான வேதியியல் கழிவுகள் வெளியேற்றப்பட்டுள்ளது.
தற்போது ஸ்டெர்லைட் ஆலையில் ஜிப்சம் கழிவுகள் மட்டும்தான் மிச்சம் இருக்கிறது. எனவே ஆலையில் மிச்சம் இருக்கும் ஜிப்சத்தின் அளவு? இந்த வேதியல் கழிவுகளை எத்தனை வாகனங்களில் பாதுகாப்பாக வெளியேற்றுவது? அதற்கான நிறுவனத்தை தேர்ந்தெடுப்பது குறித்து ஆலைக்குள் செல்லும் மேலாண்மை குழு உறுப்பினர்கள் முடிவு செய்வர் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்த உள்ளூர் மேலாண்மை குழு தூத்துக்குடி மாவட்ட சார் ஆட்சியர் கௌரவ்குமார் தலைமையில் மாவட்ட தொழிற்சாலை இணை இயக்குனர் சரவணன், மாவட்ட துணை தீயணைப்பு துறை அதிகாரி ராஜு, மாநகராட்சி அதிகாரி ரங்கநாதன், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி ஹேமந்த், மாவட்ட ரூரல் டிஎஸ்பி சுரேஷ் மற்றும் ஸ்டெர்லைட் ஆலை பொறியாளர்கள் சரவணன் மற்றும் விஸ்வநாத் உள்ளிட்ட குழுவினர் ஆலைக்குள் ஆய்வுக்கு சென்றுள்ளனர். ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஜிப்சம் வேதியியல் கழிவுகளை வெளியேற்றுவது குறித்த ஆய்வு தொடங்கி இருக்கிறது. இதுவரை அபாயகரமான வேதியியல் கழிவுகள் அகற்றப்பட்ட நிலையில், ஆலைக்குள் மிச்சம் இருக்கும் ஜிப்சம் கழிவுகளையும் அகற்றுவது குறித்த முடிவுகள் எடுக்கப்பட உள்ளதால் முக்கிய ஆய்வாக உள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்குள் ஜிப்சம் தவிர்த்து ஆலையின் உற்பத்தி பொருளுக்கான மூலப்பொருளும், அதற்கான இயந்திரங்கள் மட்டுமே மிச்சம் இருக்கும். இந்த மூலப் பொருளையும், ஆலை இயந்திரங்களையும் வெளியேற்ற உச்ச நீதிமன்றம் அனுமதி கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.