நெல்லையில் பல் பிடுங்கிய விவகாரம்: 2ம் கட்ட விசாரணையை துவக்கிய அமுதா ஐஏஎஸ் - 5 பேர் ஆஜராகி விளக்கம்
முதற்கட்ட விசாரணையை அம்பாசமுத்திரம் தாலுகா அலுவலகத்தில் மூத்த ஏஎஸ் அதிகாரி அமுதா மேற்கொண்டார். ஆனால் அந்த விசாரணையில் பாதிக்கப்பட்ட நபர்கள் யாரும் ஆஜராகாத நிலையில் அவர் திரும்பி சென்றார்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி ஒரு மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி முதன்மைச் செயலாளர் அமுதா ஐஏஎஸ் அவர்களை விசாரணை அதிகாரியாகவும் நியமனம் செய்து கடந்த 7ம் தேதி உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில் அம்பாசமுத்திரம் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த கடந்த 9 ம் தேதி நெல்லை மாவட்டம் வருகை தந்த மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதா, மாவட்ட ஆட்சியரிடம் சார் ஆட்சியரால் முதற்கட்ட விசாரணை நடத்தி சமர்பிக்கபட்ட முதற்கட்ட விசாரணை அறிக்கையை பெற்றுகொண்டார்.. அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மற்றும் சார் ஆட்சியருடன் ஆலோசனை நடத்திய பின்னர் அம்பாசமுத்திரம் தாலுகா அலுவலகத்தில் விசாரணை அலுவலகம் அமைக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களிடம் வாக்குமூலம் பெறப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும் நேரில் ஆஜராக முடியாதவர்கள் தொலைபேசி வாயிலாகவோ, இமெயில் வாயிலாகவோ, வாட்ஸஅப் மெசேஜ் அல்லது வாட்ஸஅப் ஃபோன் மூலம் வாக்கு மூலத்தை பதிவு செய்யலாம் எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதன்படி கடந்த 10 ஆம் தேதி திங்கட்கிழமை முதற்கட்ட விசாரணையை அம்பாசமுத்திரம் தாலுகா அலுவலகத்தில் மூத்த ஏஎஸ் அதிகாரி அமுதா மேற்கொண்டார். ஆனால் அந்த விசாரணையில் பாதிக்கப்பட்ட நபர்கள் யாரும் ஆஜராகாத நிலையில் அவர் திரும்பி சென்றார். இந்த நிலையில் 2 ம் கட்ட விசாரணை 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இரண்டாம் கட்ட விசாரணையின் முதல் நாளான இன்று அம்பாசமுத்திரம் தாலுகா அலுவலகத்தில் அமைக்கப்பட்ட விசாரணை அலுவலகத்தில் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியும், அரசு முதன்மை செயலாளருமான அமுதா விசாரணையை தொடங்கினார். அவரிடம் பாதிக்கப்பட்ட நபரான சிங்கம்பட்டி பகுதியை சேர்ந்த சூர்யாவின், தாத்தா பூதப்பாண்டி, விகேபுரம் பகுதியை சேர்ந்த அருண்குமார் தாயார் ராஜேஷ்வரி,தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த கணேசன் மற்றும் 17 வயது மற்றும் 16 வயது இளம் சிறார்கள் இருவர் என மொத்தம் 5 பேர் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். தொடர்ந்து பாதிக்கப்பட்ட நபர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணை நடைபெறும் அம்பாசமுத்திரம் தாலுகா அலுவலகம் முழுவதும் வருவாய்த்துறை ஊழியர்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. காவல்துறையினருக்கு விசாரணை நடைபெறும் அலுவலக வளாகத்திற்குள் அனுமதி மறுக்கவும் பட்டுள்ளது.
முன்னதாக கடந்த முறை நடைபெற்ற விசாரணையின் போது, மூத்த ஐஏஎஸ் அதிகாரியின் இந்த விசாரணையானது காலதாமதமானது என்றும், இதனை புறக்கணிக்கிறோம், ஏற்கனவே 3 முறை ஆஜராகி பாதிக்கப்பட்டவர்கள் விளக்கம் அளித்து உள்ளனர். அதன் அடிப்படையில் தவறு செய்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மீண்டும் மீண்டும் விசாரணை என்பது தேவையற்றது என பாதிக்கப்பட்டவர்களின் தரப்பு வழக்கறிஞர் மகாராஜா தெரிவித்திருந்தார். இந்த நிலையில் மீண்டும் இன்றும், நாளையும் விசாரணையானது நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்