பல்பிடுங்கிய விவகாரம்: காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்ட 3 ஆய்வாளர்களுக்கு மீண்டும் பணி
காவல் ஆய்வாளர் ராஜகுமாரி மீது சிபிசிஐடி போலீசார் பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் வழக்கு பதிவு செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
நெல்லை காவல் சரகத்தில் 10 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்து நெல்லை சரக காவல்துறை துணைத் தலைவர் பரவேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 10 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதில் குறிப்பாக அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில் பல் பிடுங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக காத்திருப்போர் பட்டியலில் இருந்த கல்லிடைக்குறிச்சி காவல் ஆய்வாளராக இருந்த ராஜகுமாரி விக்கிரமசிங்கபுரம் காவல் ஆய்வாளராக இருந்த பெருமாள் உள்ளிட்டவருக்கு மீண்டும் பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் ராஜகுமாரிக்கு தென்காசி மாவட்டம் குற்றாலம் காவல் ஆய்வாளராகவும், பெருமாள் கன்னியாகுமரி மாவட்டம் மணவாள குறிச்சி வட்டத்தின் ஆய்வாளராகவும் பணி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று மாவட்ட உளவு பிரிவு காவல் ஆய்வாளராக இருந்து பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட காவல் ஆய்வாளர் கோமதி, கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் அம்பாசமுத்திரம் பல் பிடுங்கிய வழக்கு தொடர்பாக காத்திருப்போர் பட்டியலில் இருந்த மூன்று காவல் ஆய்வாளர்கள் மீண்டும் பணியிடம் உறுதி செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதில் காவல் ஆய்வாளர் ராஜகுமாரி மீது சிபிசிஐடி போலிசார் பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் வழக்கு பதிவு செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே அம்பாசமுத்திரம் உட்கோட்டத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில் பணிபுரியும் 24 காவலர்களை மாவட்டத்தின் பிற காவல் நிலையங்களுக்கு பணிகளை மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவிட்டிருந்தார். அதன்படி அந்த உத்தரவில் சிபிசிஐடி காவல் துறையால் வழக்கில் சேர்க்கப்பட்ட உதவி ஆய்வாளர் முருகேசன், காவலர்கள் விக்னேஷ் மற்றும் மணிகண்டன் ஆகியோரும் வேறு காவல் நிலையங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டனர் அதோடு பல்பிடுங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக காத்திருப்போர் பட்டியல், ஆயுதப்படை என நடவடிக்கைக்கு உள்ளான காவலர்களையும் இதர காவல் நிலையங்களுக்கு பணியிடை மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.. எனினும் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் வழக்கமான பணியிடை மாற்ற நடவடிக்கை என காவல்துறை தரப்பில் கூறப்பட்டதும் குறிப்பிடத்தக்கது
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்