கண்கலங்கும் ரீல்ஸ்.. இன்று நிஜமாகிய சோகம் - நெல்லையில் உயிரிழந்த 3 சிறுவர்கள்
இவர்கள் விளையாட்டு தனமாக செய்த ரீல்ஸ் வீடியோ இன்று நிஜமாகிய சம்பவம் யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாத துயர சம்பவமாக மாறியுள்ளது..
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள நவ்லடி கிராமத்தைச் சேர்ந்த மகாலிங்கம் மகன் முகேஷ் (13) , இசக்கியப்பன் மகன் ராகுல் (12) , வள்ளி முத்து மகன் ஆகாஸ் (13) மற்றும் பிரகாஷ் நான்குபேரும் நவ்வலடி தனியரர் மேல்நிலைப்பள்ளியில் பயின்று வருகின்றனர். நேற்று சுதந்திர தினம் என்பதால் பள்ளியில் சுதந்திர தின விழாவை முடித்து விட்டு அருகில் உள்ள கடலுக்கு மாணவர்கள் குளிக்க சென்றுள்ளனர். அப்போது கடலில் குளித்து விளையாடிக்கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக நான்கு மாணவர்களும் அலையில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டனர். அதில் பிரகாஷ் என்ற மாணவன் மட்டும் கரைப்பகுதியில் குளித்துக் கொண்டிருந்ததால் கரையை நோக்கி ஓடி வந்து தப்பித்தான். மற்ற மூவரும் கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டு மாயமாகினர். தப்பிய பிரகாஷ் ஓடி வந்து ஊருக்குள் விபரத்தை கூறியுள்ளான். அப்போது அப்பகுதி மீனவர்கள் உடனே ஓடி வந்து கடலில் தேடினர்.
எங்கும் கிடைக்கவில்லை என்பதால் உவரி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். உவரி போலீசார் உடனடியாக நிகழ்விடத்திற்கு சென்று , தீயணைப்பு துறையினர் , கடலோர பாதுகாப்பு படையினர் மற்றும் மீனவர்கள் உதவியுடன் கடலில் இறங்கி தீவிரமாக தேடி வந்தனர். இதையறிந்த தமிழக சபாநாயகர் அப்பாவு இரவோடு இரவாக நேரில் சென்று அவர்களின் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறி கடலோர காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர்களின் தேடுதல் பணியை துரிதப்படுத்தினார்.. தொடர்ந்து இரவு முழுவதும் தேடபட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை ஆகாஷ், ராகுல்,முகேஷ் ஆகிய 3 சிறுவர்களின் சடலங்கள் கோடாவிளை அருகே கரை ஒதுங்கியது. இந்த சம்பவத்தால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. தொடர்ந்து இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த ராதாபுரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை பலியான மூன்று சிறுவர்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று அவர்களின் பெற்றோர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து அவர் சம்பவம் நடந்த கடற்கரை பகுதிகளை நேரில் பார்வையிட்டார். இது குறித்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை செய்தியாளர்களிடம் கூறுகையில், "உயிரிழந்த குடும்பத்தினருக்கு 50 லட்சம் நிவாரண உதவி வழங்க வேண்டும். குடும்பத்தில் தகுதி வாய்ந்த ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், பள்ளிகளில் மாணவர்களுக்கு இது போன்ற சம்பவம் நிகழாமல் இருப்பதற்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இதனிடையே சோகத்திலும் சோகமாக முன்னதாக உயிரிழந்த சிறுவர்கள் வெளியிட்டுள்ள ரீல்ஸ் வீடியோ இணையத்தில் வைரலாகி அனைவரையும் கன்கலங்கச் செய்துள்ளது. அதில் மச்சான் நான் சாகப்போறேன் டா என்று ஒருவர் சொல்கிற மாதிரியும் நானும் வரேன் டா மச்சான் என மற்றொரு சிறுவன் சொல்லிவிட்டு அவன் தோளில் கை போட்டுக்கொண்டு செல்கிறான். இவர்கள் விளையாட்டு தனமாக செய்த ரீல்ஸ் வீடியோ இன்று நிஜமாகிய சம்பவம் யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாத துயர சம்பவமாக மாறியுள்ளது. இந்த வீடியோவில் இருப்பது உயிரிழந்த முகேஷ் மற்றும் ராகுல். மேலும் இந்த வீடியோ கடந்த 10 நாட்களுக்கு முன் எடுக்கப்பட்டது எனவும் தெரிய வந்துள்ளது.