திருநெல்வேலி காவல்துறை அதிரடி: தலைமறைவாக இருந்த குற்றவாளிகள் கைது! 2,893 பிடிவாரண்டுகள் நிறைவேற்றம்!
இந்தாண்டில் மட்டும் 2,893 பிடிவாரண்டுகள் நிறைவேற்றப்பட்டு, தொடர்புடைய குற்றவாளிகள் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு நீதிமன்ற விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவின்பேரில், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை கைது செய்ய மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் எதிரொலியாக இந்தாண்டில் மட்டும் 2,893 பிடிவாரண்டுகள் நிறைவேற்றப்பட்டு, தொடர்புடைய குற்றவாளிகள் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு நீதிமன்ற விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
2013-ம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில் தொடர்புடைய அம்பாசமுத்திரம், பிரம்மதேசத்தை சேர்ந்த மாயபெருமாள் (வயது 60), ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். பின்னர் 9 ஆண்டுகளாக நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த நிலையில், திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் அவரை கைது செய்து, திருநெல்வேலி நீதிமன்றத்தில் ஆஜர் செய்து, உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.
மேலும் மேற்குறிப்பிட்ட நபருக்கு 2019-ம் ஆண்டு நடந்த கொலை முயற்சி வழக்கிலும் பிடிவாரண்டு நிலுவையில் இருந்தது குறிப்பிடத்தக்கது. 2010-ம் ஆண்டு நடைபெற்ற கொள்ளை வழக்கில் தொடர்புடைய ராதாபுரத்தைச் சேர்ந்த அந்தோணி சுரேஷ்(52), 6 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நிலையில், காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 2012-ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் தொடர்புடைய கேரள மாநிலத்தைச் சேர்ந்த ராஜேஷ்(40), 7 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நிலையில், நவீன தொழில்நுட்ப உதவியுடன் கர்நாடகாவில் இருப்பது கண்டறியப்பட்டு, திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் அங்கு சென்று அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் செய்து, சிறையில் அடைத்தனர். 2001-ம் ஆண்டு குற்றமுறு நம்பிக்கை மோசடி வழக்கில் தொடர்புடைய தாமஸ்(64), திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினரால் கர்நாடகாவில் இருந்து கைது செய்யப்பட்டு, பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
அதேபோல், 2023-ம் ஆண்டு வன்கொடுமை தடுப்பு மற்றும் கொலை முயற்சி வழக்கில் தொடர்புடைய பொன்ராஜ்(26) மும்பையில் தலைமறைவாக இருந்த நிலையில், காவல்துறையினர் அங்கு சென்று கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர். 2010-ம் ஆண்டு நடந்த விபத்து வழக்கில் தொடர்புடைய சஞ்சய்கிருஷ்ணா சேத்துவால்(54), 1 வருடமாக தலைமறைவாக இருந்த நிலையில், திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் மகாராஷ்டிரா சென்று கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் செய்து பாளை மத்திய சிறையில் அடைத்தனர். நீதிமன்றத்தால் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்து வரும் குற்றவாளிகளை கண்டறிய, திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் தமிழகத்திற்குள் மட்டுமன்றி பிற மாநிலங்களுக்கும் சென்று நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். மேலும் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் பிடிவாரண்டு நிலுவையில் உள்ள குற்றவாளிகளை அடையாளம் காண, நவீன தொழில்நுட்ப உதவியுடன் காவல்துறையினர் துரிதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





















