Nellai Meyor Saravanan: நெல்லை மேயர் சரவணன் ராஜினாமாவா...? - அமைச்சர் உதயநிதிக்கு பரபரப்பு கடிதம் - நடந்தது என்ன..?
நெல்லை மேயர் சரவணனை மாற்ற கோரி மாநகராட்சி திமுக கவுன்சிலர்கள் 40க்கும் மேற்பட்டோர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பரபரப்பு கடிதம் அனுப்பினர்.
நெல்லை மேயர் ராஜினாமா..?
நெல்லை மேயராக சரவணன் உள்ளார். இவர் தனது பதவியை ராஜினாமா செய்ததாக இன்று திடீரென தகவல் வெளியானது. குறிப்பாக நெல்லை மாநகராட்சியில் கவுன்சிலர்கள் மேயருக்கு எதிராக போர்க்கொடி தூக்கி வந்த நிலையில் அவர் ராஜினாமா செய்ததாக தகவல் வெளியானது. குறிப்பாக சமூக வலைதலங்களிலும், காட்சி ஊடகங்களிலும் வெளியான இச்செய்தி குறித்து மேயர் சரவணன் கூறும் பொழுது, “நான் ராஜினாமா செய்யவில்லை, தவறான செய்தி பரவிக் கொண்டு வருகிறது. நான் ராஜினாமா செய்ததாக வெளியான தகவல் கண்டிக்கத்தக்கது. இது போன்ற தவறான தகவல் பரப்புவோர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.
மேயர் சரவணன்
நெல்லை மத்திய மாவட்ட செயலாளராக அப்துல் வகாப் இருந்தபோது அவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தற்போதைய திமுக வர்த்தக அணி மாநில இணைச் செயலாளர் மாலை ராஜா மாநகர திமுக செயலாளர் சுப்ரமணியன் ஆகியோர் இரு வேறு அணிகளாக செயல்பட்டு வந்தனர். இதுபோன்ற சூழலில் தான் அப்துல் வகாப் ஆதரவால் தற்போதைய மேயர் சரவணன் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு மாநகராட்சி கவுன்சிலராக வெற்றி பெற்றார். தொடர்ந்து அப்துல் வகாப் தனக்கு வேண்டிய ஒருவரை மேயராக்க திட்டமிட்ட நிலையில் கட்சி தலைமை திடீரென சரவணனை மேயராக அறிவித்தது. இதை சற்றும் எதிர்பாராத அப்துல்வகாப் வேறு வழியின்றி சரவணனை ஆதரித்தார். ஆனாலும் மேயரான பிறகு தனக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும், அரசு திட்ட பணிகளை முடிவு செய்வது உட்பட பல்வேறு விஷயங்களில் நான் சொல்வதை கேட்டு நடக்க வேண்டும் என மேயர் சரவணனுக்கு அப்துல் வகாப் பல நிபந்தனைகளை விதித்தாக கூறப்பட்டது. நாளுக்கு நாள் அப்துல் வகாப்பின் நெருக்கடி அதிகரித்ததை தொடர்ந்து மேயர் சரவணன் அப்துல் வகாப்பின் எதிரணியான மாலைராஜா அணியில் இணைந்தார்.
உட்கட்சிபூசல் பனிப்போர்
இதனால் ஆத்திரமடைந்த அப்துல் வகாப்பின் ஆதரவு கவுன்சிலர்கள் மாநகராட்சி மன்ற கூட்டங்களில் தொடர்ச்சியாக மேயருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். குறிப்பாக அரசு ஒப்பந்ததாரர்களை மேயர் சரவணன் தனது அறைக்குள் அழைத்து கமிஷன் கேட்பதாக ஆளுங்கட்சி கவுன்சிலர்களே பகிரங்கமாக குற்றம் சாட்டினர். இதன் மூலம் திமுக உள்கட்சி பூசல் வெட்ட வெளிச்சமானதை தொடர்ந்து அப்துல் வகாப்பை மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து திமுக தலைமை அதிரடியாக நீக்கியது. அவருக்கு பதில் முன்னாள் அமைச்சரும் மாலை ராஜா அணியைச் சேர்ந்தவருமான மைதீன்கானை மாவட்ட பொறுப்பாளராக திமுக நியமித்தது. இருப்பினும் தொடர்ச்சியாக அப்துல் வகாப்பை ஆதரிக்கும் துணை மேயர் ராஜூ உள்பட திமுக கவுன்சிலர்கள் மேயருக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர். மன்ற கூட்டங்களில் மேயர் வரும் போது அவரை அவமதிப்பது, மன்ற கூட்டத்தை புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் ஈடுபட்டு வந்தனர். அதன் பின் சமீபத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மேயர் சரவணின் உரையை புறக்கணித்து திமுக கவுன்சிலர்கள் மேடையில் இருந்து கூண்டோடு வெளியேறினர்.
அமைச்சருக்கு கடிதம்..
இந்த சூழலில் நெல்லை மத்திய மாவட்ட திமுகவில் நிலவி வரும் உள்கட்சிப்பு பூசல் காரணமாக இருதரப்பினராக பனிப்போர் நிலவி வந்தது. இச்சூழலில் நெல்லை மேயர் சரவணனை மாற்ற கோரி மாநகராட்சி திமுக கவுன்சிலர்கள் 40க்கும் மேற்பட்டோர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பரபரப்பு கடிதம் அனுப்பினர். அந்த கடிதத்தில் மேயர் சரவணன் தன்னிச்சையாக ஒப்பந்ததாரர்களிடமும் மாநகராட்சி நிர்வாகத்திலும் தனி ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகிறார், மேயரின் நடவடிக்கையால் மக்கள் மத்தியில் ஒட்டுமொத்த கவுன்சிலர்களும் தலைகுனிந்து நிற்கிறோம் என தங்களது கோரிக்கையை ஏற்று மேயரை சரவணன் மீது நடவடிக்கை எடுத்து மேயரை மாற்ற வேண்டும் என்று கடிதத்தில் கவுன்சிலர்கள் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.