நெல்லை மாநகராட்சியில் மேயர் - கவுன்சிலர்களிடையே நீடிக்கும் மோதல் - பட்ஜெட் கூட்டத்தில் நடந்தது என்ன?
திருநெல்வேலி மாநகராட்சியில் வரும் 2024-25 ஆண்டுக்கான மொத்த வரவு 344.87 கோடியாக இருக்கும் எனவும் செலவினங்கள் ரூ.340.08 கோடி இருக்கும் என பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நெல்லை மாநகராட்சியின் பட்ஜெட் கூட்டம் இன்று காலை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே கடந்த 28ஆம் தேதி பட்ஜெட் கூட்டம் நடைபெறும் அறிவிக்கப்பட்ட நிலையில் அதனை ஆளும் திராவிட முன்னேற்றக் கழக மாமன்ற உறுப்பினர்கள் முழுமையாக புறக்கணித்ததால் கோரம் இல்லாமல் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் 11:30 மணி வரை பத்திற்கும் குறைவான மாமன்ற உறுப்பினர்களே அவைக்கு வந்திருந்தனர். சுமார் 30 நிமிடங்கள் தொலைபேசி மூலம் மாமன்ற உறுப்பினர்களிடமும் கட்சி பொறுப்பார்களிடம் மேயர் சரவணன் பேசிய நிலையில் 12 மணிக்கு மாமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலானவர்கள் வந்து சேர்ந்தனர். இதனை அடுத்து பட்ஜெட் கூட்டம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து மேயர் சரவணன் திருக்குறள் வாசித்து பட்ஜெட் கூட்டத்தை தொடங்குவார் என அறிவிக்கப்பட்ட நிலையில் ஆளும் கட்சி மாமன்ற உறுப்பினர்கள் சலசலப்பில் ஈடுபட்டனர். மேயர் திருக்குறள் வாசிக்க தேவையில்லை என பேசிய அவர்கள் தங்களது வார்டு பிரச்சனைகள் குறித்து பேச தொடங்கினர். ஆறாவது வார்டு மாமன்ற உறுப்பினர் பவுல்ராஜ் பேச தொடங்கினார். கடந்த ஓராண்டாக தனது வார்டியில் என்னென்ன பணிகள் நடந்துள்ளது என்பது குறித்து வெள்ளை அறிக்கை தர வேண்டும் என ஆணையரிடம் கோரிக்கை விடுத்தார்.
தொடர்ந்து பட்ஜெட் கூட்டம் முடிவடைந்ததும் சாதாரண மற்றும் அவசர கூட்டம் தொடர்ந்து நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பட்ஜெட் கூட்டத்தில் மட்டுமே கலந்து கொள்வோம் என்ற அடிப்படையில் மாமன்றத்தில் வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டு விட்டு திருக்குறள் வாசிப்பதையோ, தமிழ்நாடு அரசின் முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கும், சிறப்பாக மக்கள் நல திட்டங்கள் செயல்படுத்தி வரும் ஸ்டாலினை பாராட்டும் தீர்மானத்திற்கும் காது கொடுத்து கேட்க மனமில்லாமல் முத்தமிழ் அறிஞர் கலைஞர் பெயரில் சாலை வைப்பதற்கு தமிழக அரசுக்கு பரிந்துரை செய்வதற்கான தீர்மானம் குறித்தும் கருத்து ஏதும் தெரிவிக்காமலும் திராவிட முன்னேற்ற கழக மாமன்ற உறுப்பினர்கள் அவையை விட்டு வெளியேறினர். பத்திற்கும் குறைவான மாமன்ற உறுப்பினர்கள் இருந்த நிலையில் 4.79 ஒன்பது கோடி ரூபாய் மதிப்பிலான உபரி நிதியை கொண்ட பட்ஜெட்டை மேயர் சரவணன் வாசித்து முடித்தார். திருநெல்வேலி மாநகராட்சியில் வரும் 2024-25 ஆண்டுக்கான மொத்த வரவு 344.87 கோடியாக இருக்கும் எனவும் செலவினங்கள் 340.08 கோடி இருக்கும் என பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேயர் மாமன்ற உறுப்பினர்கள் மோதல் போக்கு இன்னும் முடிவுக்கு வராத நிலையே திருநெல்வேலி மாநகராட்சி உள்ளது. இதனால் மக்கள் நலத் திட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக கூட்டங்கள் நடத்தப்படாததால் தீர்மானங்களை நிறைவேற்ற முடியாத நிலை உள்ளது. மேயர் - மாமன்ற உறுப்பினர் இடையேயான மோதலை தீர்த்து வைக்க கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்தும் .அது பலனளிக்கவில்லை. ஆளும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெரும்பாலான மாமன்ற உறுப்பினர்கள் மேயருக்கு எதிராகவே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே பட்ஜெட் கூட்டத்தில் மட்டுமே நாங்கள் கலந்து கொண்டோம் சாதாரண மற்றும் அவசரக் கூட்டத்தை புறக்கணிக்கிறோம் என பெரும்பாலான ஆளுங்கட்சி மாமன்ற உறுப்பினர்கள் தெரிவித்து இருந்தனர். இதனால் கோரமில்லாமல் சாதாரண மற்றும் அவசரக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.