Tirunelveli: கொலை வழக்கில் மிஸ்ஸிங்.. கோவிட் சென்டர் போன்கால்.. 23 வருடங்களுக்கு பிறகு சிக்கிய குற்றவாளி.!
கொலைக்குற்றவாளி வெகுதூரம் சென்று ஒளிந்திருக்கவில்லை. அண்டை மாநிலமான கேரளாவிலேயே தன்னுடைய 23 வருட வாழ்க்கையை கழித்துள்ளார்.
திருநெல்வேலியில் கொலை வழக்கு ஒன்றில் சிக்கி தப்பித்த ஒருவரை 23 வருடங்களுக்கு பிறகு போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். 23 வருடங்களாக போலீசாருக்கு தண்ணீர் காட்டிய கொலைக்குற்றவாளி வெகுதூரம் சென்று ஒளிந்திருக்கவில்லை. அண்டை மாநிலமான கேரளாவிலேயே தன்னுடைய 23 வருட வாழ்க்கையை கழித்துள்ளார். யார் இந்த நபர்? என்ன வழக்கு?
1992-ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் கொலை வழக்கு ஒன்று போலீசாரிடம் புகாருக்கு வருகிறது. ஒரு நபரை கொலை செய்ததாக பச்சத்து என்ற நபரை போலீசார் 1992ல் கைது செய்தனர். கொலை வழக்கை விசாரித்த திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் அவருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. ஆனால் தனக்கு அளிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பச்சத்து மனுத்தாக்கல் செய்துள்ளார். ஆனால் அவரது மனுவை தள்ளுபடி செய்துள்ளது உயர்நீதிமன்றம். பின்னர் சிறையில் அடைக்கப்பட்ட பச்சத்து நீதிமன்றத்தை அணுகி ஜாமீன் வாங்கியுள்ளார். ஆனால் ஜாமீன் வாங்கிய பச்சத்து திடீரென மாயமானார்.
கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர் ஜாமினில் வெளிவந்த நிலையில் காணாமல் போனதால் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். பல இடங்களிலும் பச்சத்தை தேடியும் அவர் கிடைக்கவில்லை. குடும்பத்தினரிடம் நடத்தப்பட்ட விசாரணையும் போலீசாருக்கு கைகொடுக்கவில்லை. நாட்கள் உருண்டோட வழக்குகள் குவிந்ததில் பத்தொடு பதினொன்றாக ஆகியுள்ளார் பச்சத்து. பின்னர் அவரைத் தேடும் வேலையும் தொய்வடைந்தது. இந்நிலையில் மீண்டும் கொலைக்குற்றவாளி பச்சத்துவை தேடும் பணியை கையில் எடுத்தது காவல்துறை.
புதுவையில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி கைது
பச்சத்துவை எப்படியும் கைது செய்ய வேண்டுமென எஸ்பி மணிவண்ணன் உத்தரவிட டிஎஸ்பி பிரான்ஸிஸ் குழு இது குறித்து திட்டமிட்டுள்ளது. அம்பாசமுத்திரம் போலீசாரின் உதவியுடன் தனிப்படை அமைக்கப்பட்டு பச்சத்துவை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. பச்சத்துவின் குடும்பத்தினரை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த போலீசார் அவரது மனைவி செல்போன் மூலம் அவரை 10 நாட்களாக பின் தொடர்ந்துள்ளார். தொடப்புழாவில் உள்ள கொரோனா சென்டர் மூலம் பச்சத்துவை செல்போனில் பிடித்த போலீசார் விடுதி ஒன்றில் பல பெயர்களில் பச்சத்து தங்கி வந்ததை கண்டுபிடித்துள்ளனர். நேரடியாக கேரளா விரைந்த போலீசார் பச்சத்துவை கைது செய்தனர்.
இது குறித்து தெரிவித்த காவல் ஆய்வாளர், நாங்கள் பச்சத்துவை கைது செய்தபோது அவர் எங்களுடன் வர மறுத்தார். 1992ல் எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஒப்பிட்டு பார்த்தால் அவர் தோற்றம் பெரியளவில் மாறி இருந்தது. ஆனால் எங்களால் அவரை அடையாளம் காண முடிந்தது எனத் தெரிவித்தார். பச்சத்துவை கைது செய்துள்ள போலீசார் இத்தனை வருடங்கள் அவர் எங்கிருந்தார்? போலீசாரிடம் இருந்து தப்பித்தது எப்படி உள்ளிட்ட கேள்விகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.