புலிகள் கணக்கெடுப்பு..நெல்லையில் மூடப்பட்ட சுற்றுலா தலங்கள் - சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்
முதல் 3 நாட்கள் விலங்குகள் குறித்தும், அடுத்த 3 நாட்கள் அரியவகை தாவரங்கள், பறவைகள் குறித்தும் கணக்கெடுப்பு நடக்கிறது. இந்த பணியில் 200 வனப்பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
நெல்லை மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் திருக்குறுங்குடி முதல் கடையம் வரை 85 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. குறிப்பாக மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, சிங்கவால் குரங்கு, செந்நாய், கடமான் உள்ளிட்ட அரியவகை விலங்குகள், மூலிகை தாவரங்கள் உள்ளது. இந்த சூழலில் ஆண்டு தோறும் புலிகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறும். இந்தாண்டு நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பை கோட்டத்தில் புலிகள் கணக்கெடுக்கும் பணி( 20 ஆம் தேதி) நேற்று துவங்கியது. வருகிற 27 ம் தேதி வரை 2024ம் ஆண்டுக்கான புலிகள் கணக்கெடுப்பு பணிகள் 7 நாட்கள் நடைபெறவுள்ளது. இதையொட்டி முண்டந்துறை வனச்சரக அலுவலகத்தில் கள இயக்குனர் மாரிமுத்து தலைமையில் வனத்துறையினருக்கு கணக்கெடுப்பு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதுகுறித்து களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக கள இயக்குனர் மாரிமுத்து கூறுகையில், ”இந்த பணிகள் முதல் மூன்று நாட்கள் விலங்குகள் குறித்தும், அடுத்த மூன்று நாட்கள் அரியவகை தாவரங்கள், பறவைகள் குறித்தும் கணக்கெடுப்பு நடக்கிறது. இந்த பணியில் 200 வனப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். பணியானது 55 அடர்ந்த பீட் வனப்பகுதியில் நடைபெற்று வருகிறது. களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக பகுதியில் சுமார் 14 புலிகள் உள்ளது “ எனத் தெரிவித்துள்ளார்.
இதனால் மணிமுத்தாறு மற்றும் பாபநாசம் வன சோதனை சாவடிகள் தற்காலிகமாக மூடப்படுகிறது. இதனால் அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி, மாஞ்சோலை, சொரிமுத்து அய்யனார் கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு இன்று முதல் பொதுமக்கள் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இதனால் சுற்றுலா வரும் பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.