மணல் மேடாக காட்சியளிக்கும் ஸ்ரீவைகுண்டம் அணை- தண்ணீர் இல்லாததால் செத்து மிதக்கும் மீன்கள்
பொதுமக்களும் கால்நடைகளும் குடிநீராக பயன்படுத்தும் தாமிரபரணி ஆற்றுத் தண்ணீரில் ஏற்பட்டு வரும் சுகாதார சீர்கேட்டை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தாமிரபரணி ஆறு வற்றியதால் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் செத்து மிதக்கும் ஆயிரக்கணக்கான மீன்கள். விவசாயிகள் அதிர்ச்சி.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி அணையில் தண்ணீர் வரத்து குறைந்து மணல்மேடாக காட்சியளிப்பதால் வடகால், தென்கால் வாய்க்கால்களில் தண்ணீர் இல்லாமல் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீன்கள் செத்து மிதக்கின்றன. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அணையில் வடகால், தென்கால் என இரண்டு பிரதான கால்வாய்கள் உள்ளன. இதில் வடகால் மூலம் 12800 ஏக்கர், தென்கால் மூலம் 12760 ஏக்கர் என மொத்தம் 25560 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. தூத்துக்குடி மாவட்டத்தின் பெரும்பாலான மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் ஸ்ரீவைகுண்டம் அணை விளங்குகிறது.
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்ததால் பாபநாசம் அணையின் நீர்மட்டம் குறைந்து உள்ளது. மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் வற்றி விட்டன. ஜுனில் தொடங்க வேண்டிய தென்மேற்கு பருவமழையும் இன்னும் முழு வீச்சில் தொடங்கவில்லை. இதனால் தற்போது ஸ்ரீவைகுண்டம் அணையில் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது. அமலைச்செடிகளின் ஆக்கிரமிப்பு அதிகரித்து காணப்படுவதுடன் மணல்மேடாகவும் காட்சி அளிக்கிறது.
வடகால் மற்றும் தென்கால் வாய்க்கால்களில் மீன்கள் தண்ணீர் இன்றி செத்து மிதக்கின்றன. இதனால் அப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் செத்து மிதக்கும் மீன்களை உணவாக எண்ணி சாப்பிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட கழுகுகள் வடகால் வாய்க்காலில் செத்து மிதக்கிறது. பொதுமக்களும் கால்நடைகளும் குடிநீராக பயன்படுத்தும் தாமிரபரணி ஆற்றுத் தண்ணீரில் ஏற்பட்டு வரும் சுகாதார சீர்கேட்டை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )