தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலைய புதிய கட்டிடத்தில் தபால் நிலையத்துக்கு இடம் ஒதுக்கப்படுமா? - மக்கள் எதிர்பார்ப்பு
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பழைய பேருந்து நிலைய கட்டுமான பணிகள் இன்னும் முழுமையாக முடிவடையவில்லை. பணிகள் முடிவடைந்த பிறகே தபால் நிலையத்துக்கு இடம் ஒதுக்குவது தொடர்பாக பரிசீலனை செய்யப்படும்.
தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்டு வரும் பழைய பேருந்து நிலையத்தில் தபால் நிலையம் தொடர்ந்து செயல்பட இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அஞ்சல் துறையினர், நுகர்வோர் அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் மாநகராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் கடந்த 1970-ம் ஆண்டு முதல் 50 ஆண்டுகளுக்கு மேலாக தபால் நிலையம் செயல்பட்டு வந்தது. இந்த தபால் நிலையம் பேருந்து நிலையத்துக்கு வரும் பயணிளுக்கு மட்டுமின்றி, பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும் அஞ்சல் சேவையை வழங்கி வந்தது. குறிப்பாக வெளியூர்களில் இருந்து வரும் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இந்த தபால் நிலையம் செயல்பட்டு வந்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அஞ்சல் நிலையங்களுக்கு பழைய பேருந்து நிலையத்தில் இருந்து தான் தபால் பைகள் அனுப்பப்படுகின்றன. அதுபோல வெளியூர்களில் இருந்து வரும் தபால் பைகள் இந்த பேருந்து நிலையத்தில் தான் பெறப்படுகின்றன. எனவே, இந்த பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வந்த தபால் நிலையம் முக்கியமானதாக இருந்து வந்தது.
இந்நிலையில் பழைய பேருந்து நிலையம் முழுமையாக இடித்து அகற்றப்பட்டு, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.52 கோடியில் அதிநவீன வசதிகளுடன் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து இங்கு செயல்பட்டு வந்த தபால் நிலையம் தற்காலிக ஏற்பாடாக தூத்துக்குடி மேலூர் தபால் நிலையத்துடன் இணைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. பேருந்து நிலைய கட்டுமான பணிகள் சுமார் 90 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், அதில் தபால் நிலையத்துக்கு இடம் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் இதுவரை உறுதி அளிக்கப்படவில்லை.
மேலும், இதுதொடர்பாக அஞ்சல் துறை சார்பில் மாநகராட்சி நிர்வாகத்துக்கு கடிதம் எழுதப்பட்டும், மாநகராட்சி நிர்வாகம் சார்பில் இதுவரை எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. எனவே, புதிதாக கட்டப்பட்டு வரும் பழைய பேருந்து நிலையத்தில் தபால் நிலையத்துக்கு இடம் ஒதுக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்ட தபால் நிலையம் தொடர்ந்து செயல்பட இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் மாநகராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக எம்பவர் இந்தியா சமுக சேவை அமைப்பின் கவுரவ செயலாளர் சங்கர் தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழிக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தின் புதிய கட்டிடத்தில் தபால் நிலையம் மீண்டும் செயல்பட போதிய இடம் ஒதுக்கி தருமாறு வேண்டுகிறேன். கடந்த 1970 முதல் அங்கு செயல்பட்டு வந்த தபால் நிலையத்துக்கு தற்போது மாநகராட்சி இடம் ஒதுக்காமல் உள்ளதாக கேள்விப்படுகிறோம். இது குறித்து அஞ்சல் துறை சார்பாக வேண்டுகோள் விடுக்கப்பட்டும் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ள அஞ்சலகங்களுக்கு பழைய பேருந்து நிலையத்தில் இருந்து தான் தபால் பைகள் அனுப்பப்படுகின்றன. அங்கிருந்து வரும் பைகளும் இங்கு தான் பெறப்படுகின்றன. மேலும் அஞ்சலகம் தொடர்பான அனைத்து பணிகளும் இங்கே நடைபெற்று வந்ததால் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. எனவே, மீண்டும் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தின் புதிய கட்டிடத்தில் தபால் அலுவலகம் செயல்பட ஆவண செய்ய வேண்டும் என, அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பழைய பேருந்து நிலைய கட்டுமான பணிகள் இன்னும் முழுமையாக முடிவடையவில்லை. பணிகள் முடிவடைந்த பிறகே கடைகள், வணிக நிறுவனங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். அப்போது தபால் நிலையத்துக்கு இடம் ஒதுக்குவது தொடர்பாக பரிசீலனை செய்யப்படும் என்றனர்.