ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் போஸ்ட் ஆபீஸ் அமைவதற்கு இடம் ஒதுக்கப்படுமா ? -தூத்துக்குடி மக்கள் எதிர்பார்ப்பு
மாணவர்கள் பயணிகள் நலன் கருதி அந்த அஞ்சலோரத்துக்கு பேருந்து நிலையத்தின் கீழ் தளத்தில் இட ஒதுக்கீடு செய்து தருமாறு கேட்டுக் கொள்வதாக அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ள அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் ஏற்கனவே செயல்பட்ட அஞ்சல் அலுவலகம் தொடர்ந்து செயல்பட இடமும் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அஞ்சல் துறையினர் மற்றும் பொதுமக்கள் மாநகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தில் கடந்த 1970 ஆம் ஆண்டு முதல் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக அஞ்சல் அலுவலகம் செயல்பட்டு வந்தது. இந்த அஞ்சல் நிலையம் பேருந்து நிலையத்துக்கு வரும் பயணிகளுக்கும் பேருந்து நிலையத்தை சுற்றி உள்ள பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கும் அஞ்சல் சேவையை வழங்கி வந்தது. மேலும் வெளியூர்களில் இருந்து வரும் தபால் பைகள் அனைத்தும் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து அஞ்சல் நிலையத்தில் பெறப்பட்டு மாவட்டத்தில் உள்ள மற்ற அஞ்சல் நிலையங்களுக்கு பேருந்துகள் மூலம் அனுப்பப்பட்டன.
இந்நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அண்ணா பேருந்து நிலையம் முழுமையாக இடித்து அகற்றப்பட்டு அதிநவீன வசதிகளுடன் பேருந்து நிலையம் கடந்த மாதம் எட்டாம் தேதி திறந்து வைக்கப்பட்டது. இங்கு செயல்பட்டு வந்த அஞ்சல் நிலையம் தற்காலிக ஏற்படாக தூத்துக்குடி மேலூர் தபால் நிலையத்துடன் இணைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. பேருந்து நிலையம் செயல்பாட்டுக்கு வந்து உள்ள நிலையில் அதில் அஞ்சல் நிலையத்துக்கு இதுவரை இட ஒதுக்கீடு செய்யவில்லை. எனவே தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்ட தபால் நிலையம் தொடர்ந்து செயல்பட இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் மாநகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து தூத்துக்குடி தலைமை அஞ்சல் ஆலோசனை உறுப்பினர் கல்யாணசுந்தரம் மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையரிடம் அளித்துள்ள மனுவில், தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தில் உள்ளே 1970 ஆம் ஆண்டு சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் என்றுதான் அஞ்சலகம் உருவாக்கப்பட்டது. இந்த அஞ்சல் அலுவலகம் பொதுமக்கள் முதியோர் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பதிவு தபால் விரைவு தபால், சிறுசேமிப்பு, முதியோர் ஓய்வூதியம் மின்கட்டணம் செலுத்துதல் போன்ற சேவைகளுக்கு பெரிதாக பயனுள்ளதாக இருந்து வந்தது. தற்போது இந்த அஞ்சல் அலுவலகம் இல்லாததால் பொதுமக்கள் முதியோர்கள் மாணவ, மாணவிகள் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் உள்ள மேலூருக்கு நடந்து செல்ல வேண்டியது உள்ளது. இந்த அஞ்சல் நிலையம் தொடர்ந்து செயல்பட்டால் தமிழக அரசின் உரிமைத்தொகை 1000 பெறுவோர்களுக்கும் சுற்று வட்டார பகுதிகளுக்கு அஞ்சல் துறை மூலம் தபால் பைகளை பேருந்துகள் மூலம் அனுப்பி வைப்பதற்கும் மிகவும் வசதியாக இருக்கும், எனவே இங்கு ஏற்கனவே இருந்த அஞ்சல் அலுவலகம் மீண்டும் செயல்பட முதியோர் மாணவர்கள் பயணிகள் நலன் கருதி அந்த அஞ்சலகத்துக்கு பேருந்து நிலையத்தின் கீழ் தளத்தில் இட ஒதுக்கீடு செய்து தருமாறு கேட்டுக் கொள்வதாக அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Sivagangai: திருப்பாச்சேத்தியில் வாமனச் சின்னம் பொறித்த நிலதானக்கல் கண்டுபிடிப்பு ; தொல்நடை குழுவிற்கு பாராட்டு