தூத்துக்குடி சாலைகளில் மணல் மேடுகள்- சுற்றி வளைக்கும் தூசிப்படலம்- வாகன ஓட்டிகள் அவதி
பாளையங்கோட்டை சாலையாக துவங்கி தமிழ் சாலையாக நிறைவடையும் பிரதான சாலையில் தேங்கியுள்ள மணலால் புழுதி புயல் வீசாத குறைதான்
![தூத்துக்குடி சாலைகளில் மணல் மேடுகள்- சுற்றி வளைக்கும் தூசிப்படலம்- வாகன ஓட்டிகள் அவதி Thoothukudi: Dunes of sand on Tuticorin roads Dust cloud around motorists suffering TNN தூத்துக்குடி சாலைகளில் மணல் மேடுகள்- சுற்றி வளைக்கும் தூசிப்படலம்- வாகன ஓட்டிகள் அவதி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/19/45e307008e5f6c7efd98b1be4b0a514b1671448265893109_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தூத்துக்குடி நகராட்சியை மாநகராட்சியாக அப்போதைய முதல்வர் மு.கருணாநிதி கடந்த 2008 ஆம் ஆண்டு ஆகஸ்டு 5 ஆம் தேதி தொடங்கி வைத்தார். துவக்கி வைத்து 15 ஆண்டுகளை நிறைவு செய்யும் தூத்துக்குடி மாநகராட்சிக்கு இதுவரை காவல்துறை ஆணையரகம் அமைக்கப்படாத நிலை உள்ளது. தூத்துக்குடி மாநகராட்சியில் கடந்த 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 4 இலட்சமாக இருந்து உள்ளது.
தூத்துக்குடி தொழில் வளம் மிகுந்த நகரம் ஆகும். இங்கு பல்வேறு தொழிற்சாலைகள் அமைந்து உள்ளன. தூத்துக்குடி நகராட்சியாக இருந்த போது, 857 தெருக்கள், சுமார் 174.770 கிலோ மீட்டர் நீளத்தில் அமைந்து இருந்தன. இதில் 11.798 கிலோ மீட்டர் சிமெண்ட் சாலைகள், 111.87 கிலோ மீட்டர் நீள தார் சாலைகள், 18.668 கிலோ மீட்டர் நீள கல்தளம், 32.434 கிலோ மீட்டர் நீள மண்சாலைகள் இருந்தன. இந்த சாலைகள் பெரும்பாலும் தரம் உயர்த்தப்பட்டு உள்ளன. தற்போது பல சாலைகள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்டு வருகின்றன.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் ஸ்மார்ட் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பிரையண்ட் நகர் பிரதான சாலை, ஜெயராஜ் சாலை, தேவர்புரம் சாலை,வி.இ.சாலை,அண்ணாநகர் பிரதான சாலை புதிதாக கான்க்ரீட் சாலைகளாக அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் பிரையண்ட் நகர் பகுதியில் இன்னும் நிறைவடையவில்லை.
தூத்துக்குடி மாநகராட்சியை பொறுத்தவரை வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமத்தை அளிப்பது சாலையில் தேங்கியுள்ள மணல் மேடுகள் தான், சிறிது காற்று அடித்தாலும் வீசியடிக்கும் மணல் காரணமாக வாகனங்களை ஒட்ட இயலாத நிலையே உள்ளது. குறிப்பாக பாளையங்கோட்டை சாலையாக துவங்கி தமிழ் சாலையாக நிறைவடையும் பிரதான சாலையில் தேங்கியுள்ள மணலால் புழுதி புயல் வீசாத குறைதான் என்கின்றனர் வாகனஒட்டிகள். சாலைகளில் ஆங்காங்கே காணப்படும் பள்ளங்களாலும் வாகன ஓட்டிகள் அவ்வப்போது விபத்தில் சிக்குவதும் உண்டு. சிதம்பரநகர் பிரதான சாலை, எட்டயபுரம் சாலை, போல் பேட்டை பிரதான சாலை என பல சாலைகளிலும் மண் மேடுகளுக்கு பஞ்சமில்லை.
இது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகத்திற்கு தொடர்ச்சியாக சென்ற தகவலை தொடர்ந்து தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரடியாக களத்தில் இறங்கி மண் மேடுகளை அகற்றும் பணியினை தீவிரப்படுத்தி உள்ளார். தூத்துக்குடி பாளையங்கோட்டை சாலை, அண்ணாநகர் பிரதான சாலை பகுதிகளில் தேங்கி இருக்கும் மணம் மேடுகளை அகற்றும் பணியினை நேரடியாக களத்தில் நின்று பார்வையிட்டார். தொடர்ச்சியாக சாலைகளில் உள்ள பள்ளங்களை சீர்செய்யவும் உத்தரவிட்டார்.
தூத்துக்குடி துறைமுக சாலையில் தேங்கும் மண் உள்ளிட்டவைகளை துறைமுக நிர்வாகம் இராட்சத இயந்திரம் மூலம் சுத்தப்படுத்துவது வழக்கம், அதே போன்று இராட்சத இயந்திரம் மூலம் மாநகர் சாலைகளில் தேங்கும் .மண் மேடுகளை மாநகராட்சி நிர்வாகம் அகற்றலாம் எனக்கூறும் பொதுமக்கள்,மாநகராட்சி நிர்வாகம் தொடர்ச்சியாக மணல் மேடுகளை அகற்றும் பணியினை மேற்கொள்ள வேண்டும் என்கின்றனர் தூத்துக்குடி பொதுமக்கள்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)