தூத்துக்குடியில் ஐஸ் கேட்டமைன் என்ற போதை பொருள் பறிமுதல் - இதன் மதிப்பு இத்தனை கோடியா?
ஐஸ் போதை பொருள் இலங்கைக்கு கடத்துவதற்காக வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததா? என்ற கோணத்தில் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடியில் 8 கோடி ரூபாய் மதிப்பிலான ஐஸ் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் போதை பொருளை பதுக்கி வைத்திருந்த தம்பதியை கைது செய்து மாவட்ட தனி படை போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.
தூத்துக்குடி கடல் வழியாக சமீப காலமாக இலங்கைக்கு கஞ்சா, கடல் அட்டை, ஐஸ் போதை பொருள், ஹெராயின், பீடி இலை பண்டல்கள், வெள்ளி கொலுசுகள், உரம், சமையல் மஞ்சள் உள்ளிட்ட பொருட்கள் அதிக அளவு கடத்தப்பட்டு வருகிறது. கடல் வழியாக நடைபெறும் கடத்தல் சம்பவங்களை தடுப்பதற்கு மத்திய, மாநில உளவுத்துறை, இந்திய கடலோர காவல் படை, மெரைன் போலீசார் மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினர் தொடர்ந்து கடல் பகுதியிலும், கடலோர பகுதிகளிலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட தனிப்படை சார்பு ஆய்வாளர் ரவி குமாருக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் தூத்துக்குடியில் உள்ள இனிக்கோ நகரில் உள்ள வீடு ஒன்றில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வீட்டிற்குள் 8 கிலோ கிரிஸ்டல் மெத்தபட்டமைன் (ஐஸ் பொருள் போதை பொருள்) இருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து ஐஸ் போதை பொருளை பறிமுதல் செய்த தனிப்படை போலீசார் வீட்டில் இருந்த நிர்மல் ராஜ் மற்றும் அவரது மனைவி சிவானி ஆகிய இருவரையும் கைது செய்து தூத்துக்குடி மது விலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.
ஒப்படைக்கப்பட்ட இருவரிடம் ஐஸ் போதை பொருள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது. ஐஸ் போதை பொருள் இலங்கைக்கு கடத்துவதற்காக வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததா? என்ற கோணத்தில் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுடன் யாரெல்லாம் தொடர்பில் இருந்தார்கள் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. தற்போது கைப்பற்றப்பட்டுள்ள 8 கிலோ ஐஸ் போதை பொருளின் உள்ளார் மதிப்பு சுமார் ரூ.8 கோடி இருக்கும் எனவும் இதன் சர்வதேச மதிப்பு ரூ.24 கோடி இருக்கலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.