அதிமுக ஆட்சியில் திறக்கப்பட்ட திருத்தங்கல் பேருந்து நிலையம்- திமுக ஆட்சியில் கைவிடப்படுகிறதா..?
திருத்தங்கல் பேருந்து நிலையத்தில் அந்த வழியாக செல்லும் பேருந்துகள் உள்ளே செல்லாமல் மெயின் சாலையிலே சென்று விடுவதால் தற்போது சிவகாசிக்கு சரக்கு ஏற்றி வரும் லாரிகள் பேருந்து நிலையத்தை ஆக்கிரமித்து உள்ளன.
சிவகாசி நகரில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த திருத்தங்கல் பஸ் நிலையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகாசி அருகே உள்ள திருத்தங்கலில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அப்போதைய அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜியின் முயற்சியால் ரூ.3 கோடியே 69 லட்சம் செலவில் சிவகாசி-விருதுநகர் ரோட்டில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட்டது. இந்த புதிய பஸ் நிலையத்தை கடந்த 29.1.2016-ல் அப்போதைய முதல்- அமைச்சர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். திருத்தங்கல் நகராட்சியாக இருந்தது. பின்னர் சிவகாசி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது. திருத்தங்கல் மண்டலத்தில் 24 வார்டுகள் உள்ளன.
இந்தநிலையில் நாளடைவில் இந்த பஸ் நிலையத்துக்குள் பஸ்கள் வருவது குறைந்தது. பின்னர் சுமார் ரூ.4 கோடி வரை செலவு செய்யப்பட்டு பஸ் நிலையத்துக்கு பல்வேறு வசதிகள் ஏற்படுத்தி தந்த பின்னரும் பஸ் நிலையத்தை அரசு மற்றும் தனியார் பஸ்கள் புறக்கணித்தது. சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்படும் டவுன்பஸ்கள் மட்டும் தற்போது வரை இந்த பஸ் நிலையத்துக்கு வந்து செல்கிறது. மற்ற அனைத்து பஸ்களும் பஸ் நிலையத்தின் வெளியே நின்று விட்டு செல்கிறது.
திருத்தங்கல் பஸ் நிலையம் செயல்பட்டு இருந்தால் சிவகாசி மாநகராட்சிக்கு ஆண்டு தோறும் ஒரு குறிப்பிட்ட தொகை வாடகைகள் மூலம் கிடைத்து இருக்கும். திருத்தங்கல் பஸ் நிலையத்தில் கட்டியுள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருக்கிறது. இந்த கடைகளை சிலர் ஏலம் எடுத்த நிலையில் வியாபாரம் செய்ய பஸ்கள் வாரத நிலை தொடர்வதால் கடைக்காரர்கள் உரிய வாடகை செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் சிவகாசி மேயர் சங்கீதா இன்பம் நேரில் பார்வையிட்டு திருத்தங்கல் பஸ் நிலையத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
விருதுநகர், சிவகாசி சாலையிலேயே அமைந்துள்ள திருத்தங்கல் பேருந்து நிலையத்தில் அந்த வழியாக செல்லும் பேருந்துகள் உள்ளே செல்லாமல் மெயின் சாலையிலே சென்று விடுவதால் தற்போது சிவகாசிக்கு சரக்கு ஏற்றி வரும் லாரிகள் பேருந்து நிலையத்தை ஆக்கிரமித்து உள்ளன.
சிவகாசியில் இருந்து மதுரை மார்க்கமாக செல்லும் பஸ்களை திருத்தங்கல் பஸ் நிலையத்தில் இருந்து இயக்கினால் திருத்தங்கல் பஸ் நிலையம் பயன்பாட்டுக்கு வரும். அதே நேரத்தில் சிவகாசியில் தற்போது ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலும் முற்றிலுமாக குறையும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்து பேசி பேருந்து நிலையத்தை செயல்படுத்த வேண்டுமென்பதே சிவகாசி மக்களின் கோரிக்கையாக உள்ளது.இது குறித்து மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சிவகாசிக்கு அனுப்பி உரிய ஆய்வு மேற்கொண்டு நடைமுறை சிக்கல்களை அறிந்து பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் மாற்று நடவடிக்கை எடுத்து திருத்தங்கல் பஸ் நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
தற்போதைய நிலையில் சிவகாசி மாநகராட்சியில் குப்பைகளை சேகரிக்கும் குப்பை தொட்டிகளை வைக்கும் இடமாக மாறி உள்ளது. மேலும் பயணிகள் தங்கும் அறையில் உள்ள மின்சாதனங்கள் சேதப்படுத்தப்பட்டு உள்ளது. தாய்மார்கள் பாலுட்டும் அறை அமைக்கப்பட்டு அதன் மறுபுறத்தில் பலகை அகற்றப்பட்டு மதிபிரியர்களின் மதுக்கூடமாகவும், சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறி விட்டது.
சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அசோகன் அமைதி காக்க பொதுமக்களோ பேருந்துக்காக பேருந்து நிலையத்தின் வெளியே காத்திருக்கும் நிலை உள்ளது. கண்டுகொள்ளுமா கைவிடுமா அரசு...