நெல்லை கல்குவாரி விபத்து : காயமடைந்தவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் நிவாரண நிதி - முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு
கல்குவாரியில் சிக்கிய இருவர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், மேலும் 4 பேரை மீட்பதில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு..
நெல்லை மாவட்டம் பொன்னாக்குடி அருகே உள்ளது அடைமிதிப்பான் குளம் கிராமம், இந்த கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி இயங்கி வருகிறது, இந்த கல்குவாரியில் நேற்று இரவு கற்களை ஏற்றுக் கொண்டிருந்தபோது பாறாங்கல் விழுந்ததில் ஆறு பேர் சிக்கிக்கொண்டனர், இதில் முருகன், விஜய் ஆகிய 2 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், இந்நிலையில் மேலும் நான்கு பேர் மிகப் பெரிய கல்லில் சிக்கியதாக கூறப்படுகிறது,
இந்நிலையில் இவர்களை மீட்பதற்கு ராட்சத எந்திரம் மற்றும் ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டு அதன் மூலம் மீட்க முயற்சி செய்தனர், அது இரண்டும் தோல்வியில் முடிவடைந்தது, இந்நிலையில் அரக்கோணத்தில் இருந்து பேரிடர் மீட்புக் குழுவினர் வருகை புரிந்தனர், இந்நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டு இருப்பவர்களை மீட்க தவறிய தமிழக அரசை மாவட்ட நிர்வாகத்தின் கண்டித்து கிராம மக்கள் நெல்லை நாகர்கோவில் - பொன்னாக்குடி தேசிய நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர், அப்போது அவர்களுடன் நெல்லை சரக டிஐஜி பிரவேஷ் குமார் பேச்சுவார்த்தை நடத்தினார், பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததை தொடர்ந்து பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் போலீசார் பொதுமக்கள் மீது தடியடி நடத்தி விரட்டி பிடித்தனர், இதில் சுமார் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கிராம மக்களுக்கு சொந்தமான 60-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து வாகனத்தில் ஏற்றி சென்றனர். தொடர்ந்து அங்கு பதற்றமான சூழ்நிலை வருவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது,
தொடர்ந்து சம்பவ இடத்தை பார்வையிட்ட நெல்லை ஆட்சியர் விஷ்ணு கூறும்பொழுது, நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை தாலுகா தருவை கிராமத்தில் உள்ள தனியார் குவாரியில் நிலச்சரிவு ஏற்பட்டு 6 தொழிலாளர்கள் சிக்கினர். அதில் இருவர் உயிருடன் மீட்கப்பட்டு உள்ளனர். மேலும் 4 பேரை மீட்கும் பணி நடைபெறுகிறது. இந்திய கப்பற்படையின் உதவி கோரப்பட்டது, ஹெலிகாப்டர் கொண்டு வரப்பட்டது. தேசிய பேரிடர் மீட்பு படையினரின் உதவி கோரப்பட்டு உள்ளது. இங்குள்ள நிலை குறித்த வீடியோ அவர்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. அரக்கோணத்தில் இருந்து 30 பேர் கொண்ட மீட்பு படையினர் நெல்லை நோக்கி விரைந்து உள்ளனர். விபத்தில் சிக்கி தவிக்கும் நபருக்கு திரவ உணவு கொடுக்கப்பட்டு வருகிறது. குவாரியின் உரிமம் பெற்ற சங்கர நாராயணன் கைது செய்யப்பட்டு உள்ளார்.
குத்தகைக்கு எடுத்து நடத்தும் சேம்பர் செல்வராஜ் மற்றும் அவரது மகன் குமார் ஆகியோரை தனிப்படை அமைத்து தேடி வருகிறார்கள். குவாரியில் விதிமீறல் இருந்தால் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும். முதலில் விபத்தில் சிக்கியுள்ள நபர்களை மீட்க முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.
இதனிடையே இந்த விபத்தில் காயமுற்றவர்களுக்கு ஆறுதல் மற்றும் நிவாரணம் வழங்கி தமிழக முதல்வர் அறிவிப்பு வெளியிட்டார், அதில் இந்த துயரமான செய்தி கேட்டு மிகவும் வேதனை அடைந்தேன், மீட்புப் பணிகளை துரிதப்படுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது, இது குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், அதனடிப்படையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும், மேலும் காயமடைந்தவர்களுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியிட்டார், விபத்து நடந்து 13 மணிநேரத்தை கடந்தும் இருவர் மீட்கப்பட்ட நிலையில் மேலும் 4 பேரை மீட்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது,