DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் - திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
DMK MP Meeting: திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற உள்ளது.
![DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் - திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்? DMK MPs consultative meeting ahead of winter session of Parliament in chennai arivalayam DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் - திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/21/f3b563d1ca5ae10d300acb63b45e65461724207356998102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
DMK MP Meeting: குளிர்கால கூட்டத்தொடரை முன்னிட்டு திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
திமுக எம்.பிக்கள் ஆலோசனைக் கூட்டம்:
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் கழக மக்களவை மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம், 22-11-2024 மாலை 7.00 மணிக்கு, சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும். அதுபோது, கழக மக்களவை மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
பொருள் : நவம்பர் 25 அன்று தொடங்க உள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் - குறித்து” என குறிப்பிடப்பட்டுள்ளது.
நோக்கம் என்ன?
ஆலோசனைக் கூட்டத்தின்போது, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் திமுக எம்.பிக்கள் எப்படி செயல்பட வேண்டும், எந்த பிரச்னைகளை எழுப்ப வேண்டும் மற்றும் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்பன போன்ற ஆலோசனைகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் விசாரணையில் இருக்கும் வக்பு வாரிய சட்டத்திருத்தம், ஒரே நாடு ஒரே தேர்தல் போன்ற மசோதாக்கள் முன் வைக்கப்பட்டால் கடும் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என்ற அறிவுரைகளையும் தி.மு.க.எம்.பி.க்களுக்கு அக்கட்சி தலைவர் ஸ்டாலின் வழங்குவார் என கூறப்படுகிறது.
அதானி விவகாரம்:
இதனிடையே, அரசின் சூரிய மின்சக்தி ஒப்பந்தங்களை கைப்பற்ற, அதானி நிறுவனம் லஞ்சம் கொடுத்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரமும் நாடாளுமன்ற குளிர்காலத்தின் போது, இரு அவைகளிலும் பேசுபொருளாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அதானி விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு குறித்தும், இன்றையை திமுக எம்.பிக்களின் ஆலோசனைக் கூட்டத்தில் பேசப்படும் என கருதப்படுகிறது.
அதானி மீதான குற்றச்சாட்டு என்ன?
இந்திய அரசாங்க அதிகாரிகளுக்கு, 250 மில்லியன் டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் 2 ஆயிரத்து 100 கோடி ரூபாய்க்கு மேல் லஞ்சம் கொடுக்க திட்டமிட்டதாக, கௌதம் அதானி மீது அமெரிக்க நீதித்துறை குற்றம்சாட்டியுள்ளது. அதோடு, கௌதம் அதானி உடன் சேர்த்து சாகர் ஆர் அதானி மற்றும் வினீத் எஸ் ஜெயின் ஆகியோருக்கு, நியூயார்க் நீதிமன்றம் பிடிவாரண்டும் பிறப்பித்துள்ளது. இதுதொடர்பான குற்றப்பத்திரிகையில் தமிழ்நாடு அரசின் பெயரும் இடம்பெற்று இருந்தது. ஆனால், தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கும், அதானி குழுமத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். சமூக வலைதளங்களில் அடிப்படை ஆதாரமற்ற தகவல்கள் பரவி வருவதாகவும் கூறியுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)