Top 10 News: தஞ்சையில் 300 கிலோ கஞ்சா பறிமுதல், ஐபிஎல் 2025 எப்போது தொடங்கும்? டாப் 10 செய்திகள்
TOP 10 News: இந்தியா முழுவதும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம்.
திமுக எம்.பிக்கள் கூட்டம்
சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில், அக்கட்சியின் எம்.பிக்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று மாலை நடைபெற உள்ளது. நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டிய முக்கிய பிரச்னைகள் குறித்து இதில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனக்கும் ஆசை உண்டு - திருமாவளவன்
"எனக்கும் முதலமைச்சர் கனவு உண்டு. அடிமைகளாக இருக்கும் மக்களை ஆளும் சக்திகளாக வலுப்பெறச் செய்ய வேண்டும் என பழனியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பேச்சு
தாயகம் திரும்பிய மீனவர்கள்
இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட புதுக்கோட்டை, ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள், விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர். தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் அவர்களை வரவேற்று, அரசு ஏற்பாடு செய்த வாகனத்தில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்!
5வது நாளாக அதிகரித்த தங்கம் விலை
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து 5வது நாளாக அதிகரித்துள்ளது. சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து, 57 ஆயிரத்து 800 ரூபாயை எட்டியுள்ளது. கிராம் விலை 80 ரூபாய் அதிகரித்து 7 ஆயிரத்து 225 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
தஞ்சையில் 300 கிலோ கஞ்சா பறிமுதல்
தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே முடக்கிக்காடு என்ற இடத்தில் 300 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வாகனச் சோதனையின்போது லாரியில் ரகசிய அறை அமைத்து கஞ்சா கடத்திச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
மோதலுக்கான நேரம் இதுவல்ல - பிரதமர் மோடி
கயானா நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, “ எல்லையை விரிவுபடுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் நாங்கள் முன்னேறிச் சென்றது இல்லை. அது விண்வெளியாக இருந்தாலும் சரி, கடலாக இருந்தாலும் சரி. இந்த உலகைப் பொறுத்தவரை, இது மோதலுக்கான நேரமல்ல, மோதல்களை உருவாக்கும் நிலைமைகளை கண்டறிந்து அதை அகற்றுவதற்கான நேரம்" என்றார்.
அமெரிக்காவிற்கு ரஷ்யா மறைமுக எச்சரிக்கை
ரஷ்யா மீது தாக்குதல் நடத்த ஏவுகணைகளை வழங்கும் நாடுகள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்படும் என ரஷ்ய அதிபர் புதின் அமெரிக்காவுக்கு மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளார். ரஷ்யா மீது தாக்குதல் நடத்த தொலைதூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் வழங்கி உதவுவதாக அவர் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கு இடையிலான போரை உலகப் போராக மேற்கத்திய நாடுகள் மாற்ற முயற்சி எனவும் குற்றச்சாட்டு
சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல் - 80 பேர் பலி
சிரியாவின் பல்ரிம்யா பகுதியில் ஈரான் ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 36 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியானது. அதேவேளை, பலி எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி, சிரியாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் உயிரிழந்த ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் எண்ணிக்கை 79 ஆக அதிகரித்துள்ளது.
இந்திய அணி திணறல்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி திணறல். டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்தியா, உணவு இடைவேளை வரை, 4 விக்கெட்டுகளை இழந்து 51 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது. அதிகபட்சமாக ராகுல் 26 ரன்களை சேர்த்துள்ளார்.
ஐபிஎல் போட்டி எப்போது தொடக்கம்?
2025ம் ஆண்டின் ஐபிஎல் போட்டி மார்ச் 14ம் தேதி தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சீசனைப் போலவே 14 போட்டிகள் நடைபெறும் என கூறப்படுகிறது. மே 25ம் தேதி இறுதிப்போட்டி நடைபெறும் என கூறப்படுகிறது.