Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
சோலார் எனர்ஜி ஒப்பந்தங்கள் தொடர்பாக இந்திய அரசாங்க அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக கௌதம் அதானி உள்ளிட்டோர் மீது அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது
அதானி நிறுவனத்துக்கும் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
சோலார் எனர்ஜி ஒப்பந்தங்கள் தொடர்பாக இந்திய அரசாங்க அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக கௌதம் அதானி உள்ளிட்டோர் மீது அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. அதில் தமிழகத்தின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இது தமிழக அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
இதைத்தொடர்ந்து அதானி குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமெரிக்கா கூறியிருக்கும் குற்றச்சாட்டுக்கு எந்த முகாந்திரமும் இல்லை. ஆதாரமும் இல்லை. முற்றிலும் மறுக்கிறோம். இதுதொடர்பாக அனைத்து சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். குற்றம்சாட்டப்பாட்டவர்கள் குற்றம் நிரூபிக்கப்படும்வரை நிரபராதிகளே. நாங்கள் சட்டத்தை மதித்து செயல்படுவோம் என உறுதியளிக்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக மின்வாரியத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். அதாவது “ஒவ்வொரு மாநிலமும் ஆண்டுதோறும் நுகர்கின்ற மொத்த மின்சாரத்தில் குறிப்பிடத்தக்க அளவு புதுப்பிக்கத்தக்க மின் சக்தியை பயன்படுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் அபராதம் செலுத்த வேண்டும் என்ற ஒன்றிய அரசின் விதியின் அடிப்படையில் ஒவ்வொரு மாநிலமும் சூரிய ஒளி மினசாரத்தை வாங்க வேண்டியுள்ளது. அப்படி வாங்காதபட்சத்தில் பல்வேறு விதமான அழுத்தங்களை மாநில அரசுகளுக்கு உருவாக்குகிறது. இதன் அடிப்படையில், தமிழ்நாடு மின்சார வாரியம் 2000 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரத்தை கொள்முதல் செய்ய சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (SECI) என்ற ஒன்றிய அரசு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
தமிழ்நாட்டை பொறுத்த வரையிலும் திமுக ஆட்சி அமைந்த பிறகு அதானி நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு சூரிய மின்சாரம் தொடர்பாக எந்த நேரடித் தொடர்பிலும் இல்லை. Solar Energy Corporation Of India (SECI) என்ற ஒன்றிய அரசின் நிறுவனத்திடம்தான் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் செய்து சூரிய மின்சார கொள்முதலைச் செய்கிறது. மின் கொள்முதலுக்கான விலையை நிர்ணயத்தை SECI செய்கிறது. மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அந்த விலையை அங்கீகரிப்பதா, நிராகரிப்பதா என முடிவு செய்கிறது.
Know more: https://t.co/uNYlCaBbtk pic.twitter.com/fQ4wdJNa9d
— Adani Group (@AdaniOnline) November 21, 2024
அதிமுக ஆட்சியில் ஒரு யூனிட்டுக்கு 7.25 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டது. அதிமுக ஆட்சியில் அதானி நிறுவனத்துடன் நேரடி ஒப்பந்தம் கையொப்பமிட்டது. ஆனால் கடந்த மூன்றாண்டுகளில் திமுக ஆட்சியில் திமுக அரசு அதானி நிறுவனத்துடன் எந்தவிதமான ஒப்பந்தமும் மேற்கொள்ளவில்லை. திமுக ஆட்சியில் SECI யுடன் மட்டுமே, அதுவும் ஒரு யூனிட்டுக்கு 2.61 ரூபாய் என தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் செய்திருக்கிறது. தற்போதைய மாநில அரசின் அனைத்துவிதமான வரவு செலவும் SECI யுடன் மட்டுமே உள்ளதே தவிர எந்தவிதமான தனிப்பட்ட நிறுவனங்களுடனும் இல்லை.
தங்களின் மின் தேவைகளுக்காக மின்சாரத்தை விலை கொடுத்து வாங்கும் மாநில மின்வாரியங்களைக் கண்டறிந்து அவர்களுக்கு அதானி நிறுவனத்திடமிருந்து பெற்று மின்சாரத்தை விற்கும் புரோக்கராக SECI செயல்பட்டது என அமெரிக்க நீதிமன்றம் குறிப்பிடுகிறது. அரசு அதிகாரிகளுக்கு அதானி குழுமம் இலஞ்சம் வழங்கியது என்றால் எந்த நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டது என்பதைத்தான் விசாரிக்க வேண்டும்.
தமிழக அரசுக்கும் அதானி நிறுவனத்துக்கும் வணிக ரீதியிலான எவ்வித நேரடி தொடர்பும் இல்லை. Solar Energy Corporation Of India நிறுவனத்தோடு தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளோம். மிகவும் குறைந்த ரூ.2.61 பைசா அளவிலே கொள்முதல் செய்யப்படுகிறது” எனத் தெரிவித்தார்.