அதானியின் ஒப்பந்தங்கள் கேன்சல்..! கென்ய அதிபர் அதிரடி..!
அதானி குழுமத்துடன் போடப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக கென்ய அதிபர் வில்லியம் ரூட்டோ இன்றி அறிவித்துள்ளார்.
![அதானியின் ஒப்பந்தங்கள் கேன்சல்..! கென்ய அதிபர் அதிரடி..! Adani Group Trouble looms as Kenya President Cancels Power Transmission Deal Amid US Bribery Charges அதானியின் ஒப்பந்தங்கள் கேன்சல்..! கென்ய அதிபர் அதிரடி..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/21/8714b09dca3f393d4b70e1195c183b5e1732203016293729_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக அதானி குழுமம் மீது அமெரிக்கா சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், அதற்கு அடுத்தபடியாக கென்யா எடுத்துள்ள முடிவு, அதானிக்கு பேரிடியாக அமைந்துள்ளது.
அதானிக்கு மற்றுமொரு பேரிடி:
அதானி குழுமத்துடன் போடப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக கென்ய அதிபர் வில்லியம் ரூட்டோ இன்றி அறிவித்துள்ளார். மின்சாரத்தை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்து செல்லும் வகையிலான (Transmission) லைன்களை அமைப்பதற்கான 700 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான ஒப்பந்தத்தை ரத்து செய்திருப்பதாக அவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதோடு, ஜோமோ கென்யாட்டா சர்வதேச விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்காக அதானி குழுமத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளார்.
லஞ்சம் கொடுத்ததா அதானி குழுமம்?
கடந்த 2020ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், 250 மில்லியன் அமெரிக்க டாலர்களை இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சமாக கொடுத்து, 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான ஒப்பந்தங்களை அதானி குழுமம் பெற்றதாக கூறப்படுகிறது.
இந்த காலகட்டத்தில் அதானியின் க்ரீன் எனர்ஜி நிறுவனம், 3 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான நிதியை கடன்கள் மற்றும் பத்திரங்கள் மூலமாக, பொய்யான மற்றும் தவறான அறிக்கைகளின் அடிப்படையில் திரட்டியதாக புகார் எழுந்துள்ளது.
இது அமெரிக்க லஞ்ச ஒழிப்புச் சட்டமான, வெளிநாட்டு ஊழல் நடைமுறைச் சட்டத்தை மீறியதாகக் கூறப்படுகிறது. நியூயார்க் நீதிமன்ற பதிவுகளின்படி, கவுதம் அதானி மற்றும் சாகர் அதானிக்கு கைது வாரண்ட்களை பிறப்பித்துள்ளார். அந்த வாரண்டுகளை வெளிநாட்டு சட்ட அமலாக்கத்திடம் ஒப்படைக்க அமெரிக்க அரசு தரப்பு வழக்கறிஞர்கள் திட்டமிட்டுள்ளனர்.
அமெரிக்க குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, அதானி குழுமத்தின் பங்குகள் 20% வரை சரிந்தன, அதானி கிரீன் 18% மும்பை பங்குச் சந்தையில் (BSE) சரிந்தது.
இருப்பினும், குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அதானி குழுமம், "அமெரிக்க நீதித்துறை மற்றும் அமெரிக்க பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை. அதை மறுக்கிறோம்.
அமெரிக்க நீதித்துறை சொன்னது போல், "குற்றப்பத்திரிகையில் சொல்லப்பட்டவை அனைத்தும் குற்றச்சாட்டுகளே. குற்றங்கள் யாவும் நிரூபிக்கப்படும் வரை குற்றம்சாட்டப்பட்டவர்கள் நிரபராதியே". அனைத்து விதமான சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
மிக உயர்ந்த தரமான நிர்வாகம், வெளிப்படைத்தன்மை மற்றும் ஒழுங்குமுறை இணக்கத்தை பராமரிப்பதில் அதானி குழுமம் எப்பொழுதும் உறுதியாக உள்ளது. எங்கள் பங்குதாரர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நாங்கள் ஒரு சட்டத்தை மதிக்கும் அமைப்பு, அனைத்து விதமான சட்டங்களையும் மதித்து செயல்படுகிறோம் என்பதை உறுதியளிக்கிறோம்" என குறிப்பிட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)