நெல்லை : தாமிரபரணி ஆற்றுப்பாலம் கட்டப்பட்டு 9 ஆண்டுகளில், 4 முறை சேதம்..
2013-ம்ஆண்டு வாகன போக்குவரத்துக்கு திறக்கப்பட்ட நான்கு வழிச்சாலை மேம்பாலம்
கன்னியாகுமரி- காஷ்மீர் இடையேயான தேசிய நெடுஞ்சாலையுடன் தூத்துக்குடி துறைமுகத்தை இணைக்கும் வகையில், திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி வரை நான்குவழிச் சாலை அமைக்கப்பட்டது. கடந்த 2010-ம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டு, 2013-ம்ஆண்டு முடிவடைந்து வாகன போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது. இந்த நான்குவழிச் சாலையில் வல்லநாடு பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றின் குறுக்கே பெரிய நான்குவழிப் பாலம் அமைக்கப்பட்டது.
தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து கேரளா மற்றும் நெல்லை, குமரி, தென்காசி பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படும் இறக்குமதி சாமான்கள், காற்றாலை உபகரணங்கள், மரத்தடிகள், ஏற்றுமதி செய்யப்படும் சரக்கு பெட்டக வாகனங்கள் என நாள்தோறும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் இவ்வழியே சென்று வருகிறது.
இந்த பாலம் அடிக்கடி சேதமடைந்து வருகிறது. பாலம் கட்டப்பட்டு நான்கு ஆண்டுகளில் கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் பாலத்தின் ஒரு பகுதியில் (திருநெல்வேலி- தூத்துக்குடி வழித்தடம்) நடுவே பெரிய ஓட்டை விழுந்தது. இதனால் சுமார் 6 மாத காலம் இந்த பாதையில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின்னர் ரூ.3.14 கோடி ஒதுக்கப்பட்டு பாலம் சீரமைக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் 14-ம் தேதி பாலத்தின் மற்றொரு பகுதியில் (தூத்துக்குடி- திருநெல்வேலி வழித்தடம்) 2 பெரிய ஓட்டைகள் விழுந்து சேதம் ஏற்பட்டது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது.அனைத்து வாகனங்களும் ஒருவழிப் பாதை (திருநெல்வேலி- தூத்துக்குடி வழித்தடம்) வழியாக திருப்பி விடப்பட்டன. பாலம் சேதமடைந்து இரண்டு ஆண்டுகளை கடந்துவிட்ட போதிலும், இன்னும் சீரமைக்கப்படாததால் வாகனங்கள் அனைத்தும் தற்போது வரை ஒருவழிப் பாதை வழியாகவே சென்று வருகின்றன.
வாகனங்கள் அனைத்தும் சென்று வரும் ஒருவழிப் பாதை (திருநெல்வேலி- தூத்துக்குடி வழித்தடம்) கடந்த நவம்பர் மாதம் 2-ம் தேதி மீண்டும் சேதம் ஏற்பட்டது. பாலத்தில் திடீர் ஓட்டை விழுந்ததால், அந்த பகுதியை தேசிய நெடுஞ்சாலை துறையினர் தற்காலிகமாக சீரமைத்தனர். சாலை தடுப்புகளை போட்டு மறைத்து சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். இந்நிலையில் அதே பகுதியில் மீண்டும் சேதம் ஏற்பட்டுள்ளது. சாலையின் மேற்பரப்பில் பெரிய கீறல்கள் விழுந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்ததும் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து வந்து சாலையில் ஏற்பட்ட சேதத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். சேதமடைந்த பகுதியை சுற்றி தடுப்புகளை ஏற்படுத்தி சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
இது குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் கேட்டபோது தாமிரபரணி வல்லநாடு ஆத்துப்பாலத்தை மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனத்தை சேர்ந்த நிபுணர்கள் ஏற்கனவே ஆய்வு செய்துள்ளனர். இந்த ஆய்வில் பாலம் வலுவானதாக இருப்பதாகவே தெரியவந்துள்ளது. அதேநேரத்தில் பாலத்தில் முழமையாக சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது.அதன்பேரில் பாலத்தின் இரு பகுதிகளையும் முழுமையாக சீரமைக்க ரூ.21 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு அனுப்பப்பட்டது. அதற்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
ஓரிரு தினங்களில் டெண்டர் கோரப்பட்டு விரைவில் இறுதி செய்யப்பட்டு ஏப்ரல் மாதத்தில் சீரமைப்பு பணிகள் துவக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்த அவர், சீரமைப்பு பணிகள் துவக்கப்பட்டு 60 தினங்களுக்குள் பணிகள் நிறைவடையும் என்ற அவர், நிரந்தர சீரமைப்பு பணிகள் துவங்கும் வரை பாலத்தின் பகுதி லேசான சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வில் தெரிய வந்துள்ளது, உடனடியாக இவைகள் சீரமைக்கப்படும், நிரந்தர சீரமைப்புக்கு பின்னர் இது போன்ற பாதிப்புகள் வராது என்றனர்.