நெல்லையில் இருவேறு இடங்களில் ஊருக்குள் புகுந்த கரடி..பெண்ணை கடித்து குதறியதால் பீதியில் மக்கள்
பாபநாசம் & அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஓரு மாதத்திற்கு மேலாக சுற்றிவரும் கரடியை உடனடியாக கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்
நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகதிற்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது புலவன்குடியிருப்பு கிராமம். இக்கிராமத்தை சுற்றியுள்ள பகுதியில் கடந்த ஒரு வாரமாக கரடி ஒன்று பொதுமக்களை அச்சுறுத்தி தொல்லை கொடுத்து வந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் வாழ்ந்து வந்தனர். அதோடு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என வனத்துறையிடம் கோரிக்கை வைத்தனர். பொதுமக்கள் அளித்த தகவல் பேரில் கரடியை பிடிப்பதற்கு களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பக இயக்குநர் மற்றும் வன உயிரின காப்பாளர் ரமேஸ்வரன் உத்தரவின் பேரில் புலவன் குடியிருப்பு பகுதியில் கூண்டு வைக்கப்பட்டது. இதனிடையே இன்று காலை அந்த கூண்டில் கரடி சிக்கியது. இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டதோடு கூண்டில் சிக்கிய கரடியை வந்து பார்த்து சென்றனர். தொடர்ந்து வனச்சரக அலுவலர் தலைமையிலான வன பணியாளர்கள் கூண்டில் சிக்கிய கரடியை காட்டு பகுதியில் கொண்டு விடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இது ஒருபுறமிருக்க நேற்று நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே கோட்டவிளைப்பட்டியில் பெண் ஒருவரை கரடி கடித்து குதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நெல்லை விக்கிரமசிங்கபுரத்தை அடுத்த கோட்டவிளைப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜ துரை, கூலித்தொழிலாளியான இவரது மனைவி கலையரசி (வயது 47). இவர் நேற்று காலை 6 மணியளவில் வழக்கம் போல வீட்டின் அருகே உள்ள காட்டுப்பகுதியில் வேலைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு குட்டியுடன் கரடி ஒன்று நின்றுள்ளது. இதனை பார்த்த கலையரசி சூதாரித்துக் கொள்வதற்கு முன் குட்டியுடன் நின்று கொண்டிருந்த அந்த கரடி கலையரசியை கண்டதும் ஓடி வந்து தாக்க தொடங்கியது. கரடியின் பிடியிலிருந்து கலையரசியால் தப்ப முடியவில்லை. இதனால் அவர் சத்தம் போட்டு கத்தி உள்ளார். கலையரசியின் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் திரண்டு ஓடி வந்துள்ளனர்.
இதனை பார்த்ததும் கரடி தனது குட்டிகளுடன் ஓட்டம் பிடித்தது. கரடி தாக்கியதில் கலையரசிக்கு தோள்பட்டை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பலத்த காயங்களுடன் இருந்த கலையரசியை மீட்ட அக்கம்பக்கத்தினர் அவரை அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு அவரை மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதோடு குட்டியுடன் சுற்றி திரியும் கரடியால் மேலும் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். மேலும் பாபநாசம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கரடி சுற்றிவரும் நிலையில் அதனை உடனடியாக கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்