மாவட்ட நிர்வாகத்தை விமர்சித்த வனத்துறை; நெல்லையில் மீண்டும் சர்ச்சை
ஆட்சியரின் உத்தரவிற்கு பின் பொதுமக்கள் 5 நாட்கள் தங்கி இருந்து ஆடி அமாவாசை திருவிழாவை வெகு விமரிசையாக கொண்டாடி சென்றனர்.
நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது காரையார் சொரிமுத்தையனார் திருக்கோவில். இந்த திருக்கோவிலில் நடைபெறும் ஆடி அமாவாசை திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் பக்தர்கள் வனப்பகுதியில் தங்கி விரதம் இருந்து வழிபாடுகளை மேற்கொள்வது வழக்கமான ஒன்று. குறிப்பாக 10 நாட்கள் வந்து தங்கி இருந்து விழா நடத்துவர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது வனத்துறை. அந்த வகையில் கடந்த ஆண்டு 5 நாட்கள் தங்க அனுமதி கொடுத்த நிலையில் இந்த ஆண்டு பக்தர்கள் தங்குவதற்கு மூன்று நாட்களுக்கு மட்டும் வனத்துறை அனுமதி வழங்கியது. இதனால் கடுமையான எதிர்ப்புகள் எழுந்தது. ஐந்து நாட்கள் தங்குவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என பக்தர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
டன் கணக்கில் அகற்றப்பட்ட குப்பை
குறிப்பாக தற்போது களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனராக பணிபுரிந்து வரும் செண்பக பிரியா பொறுப்பேற்றது முதல் வனப்பகுதியில் பொதுமக்கள் செல்ல பல்வேறு நிபந்தனைகளை விதிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. 5 நாட்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை எனில் செண்பக பிரியா இல்லம் முன்பு பொங்கலிடும் போராட்டம் நடத்தப்போவதாகவும் பக்தர்கள் அறிவித்திருந்தனர். இதனையும் கண்டு கொள்ளாத வனத்துறை அதற்கு அனுமதி மறுத்த நிலையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இந்த விவகாரத்தில் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று ஐந்து நாட்கள் கோவிலுக்கு சென்று தங்கிக் கொள்ள அனுமதி வழங்கியது. ஆனால் ஆட்சியரின் இந்த உத்தரவை பொருட்படுத்தாமல் 3 நாட்கள் மட்டுமே தங்க அனுமதி என திட்டவட்டமாக தெரிவித்தது. வனத்துறை தன்னிச்சையாக செயல்படுவதாக புகார் எழுந்தது. இதுவும் புகாராக ஆட்சியருக்கு செல்ல ஆட்சியர் கடும் கோபமடைந்ததோடு வனத்துறை அதிகாரிகளை கடிந்து கொண்டதாக கூறப்படுகிறது.
வனத்துறை வாட்ஸ் அப்பில் பதிவிட்ட புகைப்படம்
ஆட்சியரின் உத்தரவிற்கு பின் பொதுமக்கள் 5 நாட்கள் தங்கி இருந்து ஆடி அமாவாசை திருவிழாவை வெகு விமரிசையாக கொண்டாடி சென்றனர். லட்சக்கணக்கான பக்தர்கள் வனப்பகுதியில் அமைந்துள்ள காரையாறு சொரிமுத்தையனார் கோவிலுக்கு சென்று வந்த நிலையில் அங்கு அதிகமாக குப்பைகள் தேங்கியது. இதனை சரிசெய்யும் பொருட்டு 3 நாட்கள் சுத்தப்படுத்தும் பணி நடைபெறும் என்பதால் பொதுமக்களுக்கு அங்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் வனப்பகுதியை பாதுகாக்கும் நோக்கில் தன்னார்வலர்கள், தூய்மை பணியாளர்களோடு இணைந்து நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் கார்த்திகேயன், சேரன்மகாதேவி சார் ஆட்சியர் உள்ளிட்டோர் வனப்பகுதியில் தூய்மைப் பணிகளை மேற்கொண்டனர். குறிப்பாக ஒரே நாளில் டன் கணக்கில் குப்பைகள் அகற்றப்பட்டது. ஆனால் அந்த தூய்மை பணியில் வனத்துறையினர் யாரும் கலந்து கொள்ளவில்லை என்ற விமர்சனம் எழுந்தது.. இந்த நிலையில் தூய்மை பணியை நிறைவடைந்த நிலையில் ஏராளமான குப்பைகள் இருக்கிறது என புகைப்படம் எடுத்து வாட்ஸ் அப் குழுக்களில் பதிவிட்டு உள்ளனர்.
வனத்துறை அதிகாரிகளின் வாட்ஸ் அப் சர்ச்சை
குறிப்பாக வனப்பகுதியில் நடைபெற்ற தூய்மைப் பணிகள் முழுமை பெறாமல் அரைகுறையாக நடந்துள்ளதாக சில புகைப்படங்களை அவர்களுக்கென்று வைத்துள்ள whatsapp குழுவில் வனத்துறை அதிகாரி பதிவு செய்துள்ளார். இது மாவட்ட ஆட்சியரின் தூய்மை பணியை விமர்சனம் செய்து பதிவிட்டதாகவே பார்க்கப்படுவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே வனப்பகுதியில் மூன்று நாட்கள் மட்டும் தங்குவதற்கு வனத்துறை அனுமதி அளித்த நிலையில் மாவட்ட ஆட்சியர் இந்த விவகாரத்தில் தலையிட்டு பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று ஐந்து நாட்கள் தங்கி கொள்ள அனுமதி அளித்து சிறப்பு அதிகாரியையும் நியமித்து நடவடிக்கை மேற்கொண்ட நிலையில், அதில் கடும் கோபத்தில் இருந்த வனத்துறை அதிகாரிகள் மாவட்ட ஆட்சியரை விமர்சித்து இருப்பதாக கூறப்படுகிறது. இது மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறையினர் மத்தியில் விரிசலை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் வனத்துறையினரின் அதிருப்தி காரணமாகவே மீண்டும் இந்த சர்ச்சை எழுந்திருப்பதாக கூறப்படுகிறது..