நெல்லை: வம்பன் 8 என்ற வீரிய உளுந்து விதைக்கும் பணி பாளை மத்திய சிறையில் துவக்கம்
பாளையங்கோட்டை மத்திய சிறையில் சிறை வாசிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், அதிக மகசூல் கிடைக்கும் அரசின் வம்பன் 8 என்ற உளுந்து சிறை வாளாக நிலத்தில் விதைக்கப்பட்டுள்ளது,
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலை மிகவும் பழமையான சிறைச்சாலையாகும். இங்கு விசாரணை கைதிகள் மற்றும் தண்டனை கைதிகள் என சுமார் 1400 பேர் உள்ளனர். இதில் தண்டனை கைதிகள் மட்டும் சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். இவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக ஏற்கனவே சிறைச்சாலையில் பேக்கரி வகை இனிப்புகள் செய்யும் கூடம், காகிதக் கவர்கள் தயாரிக்கும் தொழில், தச்சு பட்டறை தொழில் கூடம், கால்நடைகள் வளர்ப்பும் நடைபெற்று வருகிறது. இங்கு உற்பத்தியாகும் பொருட்களை விற்பதற்கு சிறைத்துறை அங்காடியும் பாளையங்கோட்டை சிறைச்சாலை பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிறைச்சாலை வளாகத்தில் உள்ள 12 ஏக்கர் விவசாய நிலத்தில் வாழை, நிலக்கடலை, காய்கறி பயிர்கள் என பல்வேறு வகையான சாகுபடி பணிகளும் தண்டனை கைதிகளால் செய்யப்பட்டு வருகிறது. தற்பொழுது தமிழக அரசின் விவசாய துறை சார்பில் வீரியமிக்க வம்பன் 8 என்ற உளுந்து பயிர்கள் விதைக்கும் பணி சிறை வளாகத்தில் உள்ள விவசாயத் தோட்டத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மதுரை மண்டல சிறைத்துறை டிஐஜி பழனி கலந்து கொண்டு விதைப்பு பணியை தொடங்கி வைத்தார். தண்டனை கைதிகள் முதல் கட்டமாக சுமார் ஒன்றரை ஏக்கர் நிலப்பரப்பில் உளுந்து விதைகளை விதைத்தனர். மேலும் இங்கு உள்ள தண்டனை கைதிகளின் வருவாயை பெருக்கும் வகையிலும், சிறை வளாகத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாகவும், பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் தொழில்நுட்ப உதவியுடன் விவசாய நிலங்களில் மக்கும் தன்மையினை உடைய இயற்கை உரங்களை தயாரிக்கும் பணிகளும் தொடங்கப்பட்டன. இது தொடர்பான பயிற்சியை மூத்த அணு விஞ்ஞானி டேனியல் செல்லப்பா தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து சிறைத்துறை டிஐஜி பழனி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், பாளையங்கோட்டை மத்திய சிறையில் சிறை வாசிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், அதிக மகசூல் கிடைக்கும் அரசின் வம்பன் 8 என்ற உளுந்து சிறை வாளாக நிலத்தில் விதைக்கப்பட்டுள்ளது, இது 120 நாள் பயிராகும். இது அதிக விளைச்சல் தரக்கூடிய ரகம். மேலும் சிறை வாசிகளுக்கு தொழில் நுட்ப உதவி பயிற்சி அளிக்க பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் இருந்து மூத்த விஞ்ஞானி டேனியல் செல்லப்பா வந்துள்ளார், அந்த பயிற்சியும் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் சிறை அங்காடிகள் மூலமாக விற்பனை செய்யப்படும். மக்களுக்கும் ஒரு நல்ல தரமான ஒரு பொருள் விலை குறைவாக கிடைப்பதற்கு இது உதவிகரமாக இருக்கும். இதன் மூலம் சிறைவாசிகளின் குடும்பங்களுக்கும் பொருளாதார உதவி கிடைக்கும் என்றார். தொடர்ந்து பேசிய அவர், மாத்திற்கு 1½ லட்சம் ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான வேளாண் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சிறைச்சாலைக்குள் அடிப்படை வசதிகள் சிறப்பாக உள்ளது. சிறைக்குள் நடைபெறும் குற்றங்கள் தற்போது குறைந்துள்ளது என தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து பேசிய மூத்த அணு விஞ்ஞானி டேனியல் செல்லப்பா கூறும் பொழுது, தண்டனை கைதிகள் தங்களது தண்டனை முடிந்து செல்லும் பொழுது தாங்களே சுயமாக தொழில்கள் தொடங்கவும், வருவாயை பெருக்கும் நோக்கிலும் பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் புதிய தொழில்நுட்ப உதவிகளுடன் இந்த பயிற்சிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்..