12 நாட்களாக நீடித்து வந்த அமலி நகர் மீனவர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது - திங்கள் முதல் மீன்பிடிக்க செல்ல ஒப்புதல்
அமலிநகர், ஜீவாநகர் மீனவ கிராமத்துக்கு முறையே ரூ.58 கோடி மற்றும் ரூ.25 கோடி மதிப்பில் தூண்டில் வளைவு அமைப்பதற்கு தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் அனுமதியை பெற்று விரைவில் அமைக்கப்படும்.
திருச்செந்தூர் அமலிநகரில் 226 மீன்பிடி பைபர் படகுகள் மூலம் மீனவர்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். இப்பகுதி மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, அமலிநகரில் ரூ.58 கோடியில் தூண்டில் வளைவு அமைக்கப்படும் என கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டப்பேரவையில் மீன்வளத்துறை அமைச்சர் அறிவித்தார். ஆனால், ஓராண்டு கடந்தும் இதுவரை தூண்டில் வளைவு அமைக்கப்படவில்லை எனக் கூறி அமலிநகர் மீனவர்கள் கடந்த 7-ம் தேதி முதல் கடலுக்கு செல்லாமல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மீனவர்கள் போராட்டம் தொடங்கிய மறுநாளே மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். ஆனால், மீனவர்கள் பேச்சுவார்த்தைக்கு செல்ல மறுத்து போராட்டத்தை தொடர்ந்தனர். மேலும், தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு காரணமாகவே தூண்டில் வளைவு அமைப்பதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. தூண்டில் வளைவு அமைப்பதற்கான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. எனவே அமலிநகரில் தூண்டில் வளைவு நிச்சயம் அமைக்கப்படும். இது தொடர்பாக எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்க தயார் என மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் கடந்த திங்கள்கிழமை விரிவான விளக்கம் அளித்தார்.
இந்த நிலையில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவின்படி கடல் பகுதியில் கடினமான வடிவிலான எந்தவொரு கட்டுமானங்களும் மேற்கொள்ளப்படக் கூடாது எனவும், மேலும் கடற்கரை ஒழுங்குமுறையாற்று வரைபடம் தமிழ்நாடு முழுமைக்குமான கடற்கரை பகுதிகளை உள்ளடக்கி தயார் செய்து அதன் பேரில் ஒப்புதல் பெறப்பட்ட பின்னரே இது போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் கடற்கரை ஒழுங்கு முறையாற்று வரைபடம் பணி நிறைவு பெற்றுள்ளது.
இது குறித்து மீனவ கிராம பிரதிநிதிகள் மற்றும் ஊர் நிர்வாகத்தினருடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது. பேச்சுவார்த்தை இதனை தொடர்ந்து அமலிநகர் ஊர்மக்கள் சார்பில் சுமார் 70 மீனவர் மற்றும் மீனவ மகளிர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்களுடன் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், மீன்வளத்துறை இணை இயக்குனர் அமல்சேவியர், திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ் ஆகியோர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. இந்த கூட்டத்தில் ஊர்மக்களின் கருத்துக்களை கேட்டுக் கொண்ட பின், மாவட்ட கலெக்டர் அமலிநகர், ஜீவாநகர் மீனவ கிராமத்துக்கு முறையே ரூ.58 கோடி மற்றும் ரூ.25 கோடி மதிப்பில் தூண்டில் வளைவு அமைப்பதற்கு தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் அனுமதியை பெற்று விரைவில் அமைக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உறுதி அளித்தார். அதனை ஏற்றுக் கொண்ட ஊர் மக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு திங்கட்கிழமை முதல் மீன்பிடி தொழிலுக்கு செல்ல தீர்மானித்து உள்ளனர்.