வயல்வெளியில் அறுந்துகிடந்த மின்கம்பியை மிதித்த 2 விவசாயிகள் உயிரிழப்பு - தென்காசியில் சோகம்
. இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்த நிலையில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே வெள்ளானை கோட்டை பகுதியை சேர்ந்தவர் சண்முகவேல் (75). இவரது சகோதரர் குருசாமி (68). இவர்களுக்கு சொந்தமாக விவசாய நிலம் உள்ள நிலையில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் விவசாய பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. கம்மாகிணறு வயல்காடு பகுதியில் இவர்கள் இருவரும் விவசாய பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வந்துள்ளனர். அப்போது அங்கு மின் வயர் அறுந்து கிடந்துள்ளது. அதனை கவனிக்காத சண்முகவேல் எதிர்பாராத விதமாக அதனை மிதித்துள்ளார். அப்போது அவரை மின்சாரம் தாக்கிய நிலையில் அருகிலிருந்த சகோதரர் குருசாமி அவரை மீட்க சென்றுள்ளார். அப்போது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்த நிலையில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். இதனை பார்த்த சிலர் உடனடியாக இது குறித்து புளியங்குடி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்த புளியங்குடி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டதோடு உடனடியாக இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். மின்சாரம் தாக்கி வயல்வெளியில் ஒரே நேரத்தில் அண்ணன், தம்பி ஆகிய இரண்டு விவசாயிகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.