தென்காசியில் கிணறு தோண்டும் பணியின் போது 3 பேர் உயிரிழப்பு - விபத்து எப்படி நடந்தது..?
முதற்கட்டமாக 15 அடி தோண்டி உள்ளனர். பின்னர் பாறை வந்ததால் வெடி மருந்து குச்சிகளை வைத்து கிணற்றின் ஆழத்தை அதிகப்படுத்துவதற்காக டெட்டனேட்டர் வெடிபொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே புதுப்பட்டி கிராமம் ராம்நகரில் பால் என்பவர் தோட்டத்தில் கடந்த 10 நாட்களாக கிணறு வெட்டும் பணியானது நடைபெற்று வருகிறது. சக்திவேல் என்ற ஒப்பந்ததாரர் இந்த பணியை செய்து வருகிறார். முதற்கட்டமாக 15 அடி தோண்டி உள்ளனர். பின்னர் பாறை வந்ததால் வெடி மருந்து குச்சிகளை வைத்து கிணற்றின் ஆழத்தை அதிகப்படுத்துவதற்காக டெட்டனேட்டர் வெடிபொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக இப்பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த அரவிந்த், ஆசீர் சாலமோன் ஆகிய இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ராஜலிங்கம், மாரி செல்வம் ஆகிய இருவர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ராஜ லிங்கம் என்பவரும் உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது. மாரி செல்வம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து ஆலங்குளம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.