தென்காசி: அரசு பேருந்தில் ஆபத்தை ஏற்படுத்தும் பிளக்ஸ் பேனர்..! அச்சத்தில் வாகன ஓட்டிகள்..!
மழைக்காலம் துவங்க உள்ளதால் அனைத்து பேருந்துக்களையும் முறையாக பராமரிப்பு செய்து இயக்க வேண்டும். ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நிகழாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து சுற்றுவட்டார கிராமங்களுக்கு நாள்தோறும் 20க்கும் மேற்பட்ட நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. காலை, மாலை என இருவேளைகளிலும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் பணிக்குச் செல்லும் பெண்கள் என அனைவரும் இந்த பேருந்தை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது மழைக்காலம் துவங்க உள்ள நிலையில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. அரசு பேருந்துகளில் மேற்கூரையில் இருந்து மழை நீர் பேருந்தினுள் புகாமல் இருக்க பேருந்தின் மேற்பகுதியில் தார் ஷீட் ஒட்டப்படுவது வழக்கம்.
ஆனால் சங்கரன்கோவில் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து 34B வழித்தட பேருந்து சங்கரன்கோவிலிருந்து கரிவலம்வந்தநல்லூர், கோமதி முத்துபுரம், துரைச்சாமிபுரம் வழியாக ராயகிரிக்கு இயக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பள்ளி கல்லூரி நேரங்களில் மாணவ மாணவியர்களை ஏற்றி செல்வதற்காக இந்த பேருந்து குறிப்பிட்ட வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பேருந்தின் மேற்கூரையில் தார் ஷீட்க்கு பதிலாக திருமணம் சுப நிகழ்ச்சிகள் மற்றும் அரசியல் கட்சியினர் விளம்பரத்திற்காக பயன்படுத்தும் பிளக்ஸ் பேனர் கொண்டு பேருந்தின் மேற்கூரை முழுவதும் மூடப்பட்டுள்ளது. பேருந்தின் பின்பகுதியில் பிளக்ஸ் பேனர் பெயர்ந்து காற்றில் ஆடிய வண்ணம் உள்ளது. பேருந்து வேகமாக செல்லும்போது பிளக்ஸ் பேனர் காற்றின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் பெயர்ந்து காற்றில் பறக்கக்கூடிய சூழல் உருவானால் பின்னால் வரும் இருசக்கர வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் பெரும் விபத்தில் சிக்க கூடிய அபாயம் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அதிகாரிகளின் அலட்சியமான செயலால் பெரும் விபத்து ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் போக்குவரத்துதுறையினர் இதனை கவனத்தில் கொண்டு உடனடியாக பேருந்தின் மேற்கூரையில் ஒட்டப்பட்டுள்ள பிளக்ஸ் பேனரை அகற்றி முறையான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.. அதோடு இந்த காட்சிகள் சமூக வலைத்தலங்களில் பரவி வருவதோடு டேய் நண்பா இது தான் நீ சொன்ன திராவிட மாடல் பேருந்தா என பதிவிட்டு அரசை சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த சம்பவம் சங்கரன்கோவில் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மழைக்காலம் துவங்க உள்ளதால் அனைத்து பேருந்துக்களையும் முறையாக பராமரிப்பு செய்து இயக்க வேண்டும். ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நிகழாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.