பெற்ற மகனை கொலை செய்து தற்கொலை நாடகமாடிய பெற்றோர் கைது - தென்காசியில் அதிர்ச்சி
பெற்றோரே பெற்ற மகனை உறவினருடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள வல்லம் கிராமம். இங்குள்ள பிஸ்மி 4 வது தெருவை சேர்ந்தவர் முகைதீன் அப்துல்காதர். இவரது மனைவி செய்யது அலி (39). இவர்களது மகன் அபு என்ற முகம்மது சித்திக் (25). இவர் கடந்த 5 ஆம் தேதி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குற்றாலம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணையும் நடத்தி வந்தனர். இதனிடையே இறந்து போன முகம்மது சித்திக்கின் முதற்கட்ட பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி தகவல் வெளியானது. குறிப்பாக இறந்த முகம்மது சித்திக்கின் கழுத்தில் காயங்கள் இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் தங்களது விசாரணையை துரிதப்படுத்தினர். பெற்றோர், உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் என தீவிர விசாரணையை மேற்கொண்டனர், அதில் மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. அதில் பெற்றோரே தனது உறவினர் ஒருவர் உதவியுடன் பெற்ற மகனை கொலை செய்திருப்பது அம்பலமானது.
காவல்துறை விசாரணையில், முகமது சித்திக் வேலைக்கு எதுவும் சொல்லாமல் போதைக்கு அடிமையாகி குடும்பத்தில் உள்ளவர்களிடமும், உறவினர்களிடமும் அடிக்கடி தகராறு செய்து வந்ததாகவும், இதனை பெற்றோர் பலமுறை கண்டித்தும் அவர் தனது போக்கை மாற்றிக் கொள்ளாமல் இருந்துள்ளார். இதனால் விரக்தியடைந்த பெற்றோர் மகன் நமக்கு தேவையில்லை என முடிவெடுத்துள்ளனர். அதன்படி தந்தை அப்துல்காதா்(51), தாய் செய்யது அலி பாத்திமா (39), பாத்திமாவின் சகோதரர் திவான்ஒலி(39) ஆகியோர் சேர்ந்து கடந்த 5 ஆம் தேதி அவரை துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளனர். பின்னர் சித்திக் தற்கொலை செய்து கொண்டதாக போலீசில் புகார் செய்துள்ளனர். அதன் பின்னர் கிடைத்த பிரேத பரிசோதனையில் கொலையை மூடி மறைக்க மகன் தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியது தெரிய வந்துள்ளது. அதோடு விசாரணையில் மகனுடன் ஏற்பட்ட தகராறில் அவரை கொலை செய்ததும், பின் தற்கொலை நாடகமாடியதும் அம்பலமானது. இதைத்தொடர்ந்து 3 பேரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். பெற்றோரே பெற்ற மகனை உறவினருடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.