55 வருடம்.... கடல் கடந்து தந்தையின் கல்லறையை கண்டுபிடித்த மகன் - முதல்வர் புகழாரம்..!
தமிழ்நாட்டில் புதைக்கப்பட்ட தாயார் கல்லறையில் இருந்து எடுத்த மண்ணை விமானம் மூலம் மலேசியாவுக்கு கொண்டு சென்று தந்தையின் கல்லறை மீது தூவி விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினார் திருமாறன்.
தென்காசி மாவட்டம் கடையம் அருகேயுள்ள வெங்கடாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சமூக நல ஆர்வலர் திருமாறன். இவர் அப்பகுதியில் குழந்தைகள் இல்லம் நடத்தி வருகிறார். மேலும் ரஜினிகாந்த் இரத்த தான முகாமை தொடங்கி நடத்தி வருகிறார். இவரது தந்தை ராமசுந்தரம் என்ற பூங்குன்றன். மலேசிய நாட்டில் ஆசிரியராக பணிபுரிந்த இவர் திருமாறன் பிறந்த 6 மாதங்களிலேயே உடல் நலக்குறைவால் (1967 ஆம் ஆண்டு) மறைந்தார். இவரது மனைவி ராதாபாய் கணவர் இறந்த சில நாட்களிலேயே அவருக்கு அங்கு கல்லறை எழுப்பி விட்டு இந்தியா திரும்பிவிட்டார். பின்னர் சில நாட்களிலேயே தாயார் ராதாபாயும் மறைந்தார். இந்த சூழலில் திருமாறன் முழுமையாக சமூக பணிகளில் ஈடுபட்டு வந்தார்.
குறிப்பாக தந்தை இறந்து 55 வருடங்களும், தாயார் இறந்து 35 ஆண்டுகளும் ஆன பின்னரும் அவர்களை பற்றிய நினைவு அடிக்கடி அவரது மனதில் வந்து கொண்டே இருந்துள்ளது. இதனால் தந்தையின் கல்லறைக்கு சென்று மரியாதை செலுத்த வேண்டும் என்ற எண்ணமும் அவருக்குள் இருந்து வந்துள்ளது. ஆனால் குழந்தை பருவத்திலேயே இந்தியா வந்ததால் தந்தையின் கல்லறை இருக்கும் இடம் அவருக்கு தெரியவில்லை. இருப்பினும் எப்படியாவது கண்டுபிடித்துவிட வேண்டும் என்ற எண்ணம் மட்டும் அவருக்குள் வேரூன்றி நின்றுள்ளது. இந்த சூழலில் தான் கூகுள் மூலம் தேடியுள்ளார். அதில் ஆசிரியர் பூங்குன்றன் பணியாற்றிய பள்ளி மூலம் அவரது பழைய மாணவ, மாணவியரை தேடி கண்டுபிடித்தார். குறிப்பாக மோகனராவ், நாகப்பன் ஆகிய இருவர் பற்றிய விவரங்கள் கிடைத்துள்ளது. அவர்கள் மூலம் கெர்லிங் பகுதியில் இருக்கும் தனது தந்தையின் கல்லறையை கண்டுபிடித்தார்.
பின் கல்லறையைத் தேடி தமிழ்நாட்டில் இருந்து மலேசியாவுக்கு திருமாறன் சென்றார். நமது நாட்டில் உறவினர்கள், சந்ததியினரால் பராமரிக்கப்படும் கல்லறைகள் என்பது இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. குறிப்பாக புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு விடும் அல்லது மண்ணோடு மண்ணாகி விடும். குடியிருப்புகளாக கூட மாறி இருக்கும். ஆனால் மலேசியாவில் கல்லறை அப்படியே இருந்தது தான் ஆச்சரியத்தின் உச்சம். அவரது கல்லறையில் அவரது பளிங்கு கல் படம் கொண்டு இருக்கிறது. சீனர், மலாய், தமிழ் மக்கள் இணைந்து வாழுகின்ற மலேசியாவில் இந்த மயான தோட்டத்தில் கிறிஸ்தவர், இந்து மக்கள் ஒன்றாக புதைக்கப்பட்டுள்ளனர். இதனை நேரில் சென்று பார்த்த தந்தையின் முகமறியாத மகன் திருமாறன் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே கிடையாது.
மேலும், தமிழ்நாட்டில் புதைக்கப்பட்ட தாயார் கல்லறையில் இருந்து எடுத்த மண்ணை விமானம் மூலம் மலேசியாவுக்கு கொண்டு சென்று தந்தையின் கல்லறை மீது தூவி விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினார் திருமாறன். இதேபோல் தந்தையின் கல்லறையில் உள்ள மண்ணை தாயாரின் கல்லறைக்கு கொண்டு வந்தும் வைத்துள்ளார்.. இந்த சம்பவம் பலருக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..
இதனையறிந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து மடலை பதிவு செய்துள்ளார். அதில், “மனிதன் உணர்ச்சிக் குவியல்களால் ஆனவன். அன்பின் தேடலில்தான் வாழ்நாளெல்லாம் நம் வாழ்வின் பயணம் அமைகிறது. தென்காசியின் வேங்கடம்பட்டியைச் சேர்ந்த திரு. திருமாறன் அவர்கள், தனது தந்தை திரு. இராமசுந்தரம் அவர்களின் நினைவிடத்தைத் தேடி மலேசியாவுக்கு மேற்கொண்ட பயணம் அவரது வாழ்வின் தேடல் என்றே நான் உணர்கிறேன். இந்தப் பயணத்தில், திரு. திருமாறன் அவர்களது அன்பு மட்டுமல்ல, கடல் கடந்து மலேசியாவில் வாழும் தமிழர்களின் பண்பாடும் வெளிப்படுகிறது. 50 ஆண்டுகளுக்கும் முன்னால் திரு. இராமசுந்தரம் அவர்கள் வழங்கிய மிதிவண்டி குறித்து இன்றும் நினைவில் வைத்திருக்கும் திரு. பெருமாள், இளம் வயதிலேயே மறைந்துவிட்ட இராமசுந்தரம் அவர்களை மறவாத நாகப்பன் உள்ளிட்டோர் தமிழரின் தனித்துவமான பண்பாட்டின் அடையாளங்களே!
தாய்த்தமிழ்நாடு திரும்பிய பின் தன் தாயையும் இழந்த திரு. திருமாறன் அவர்கள், ஆதரவற்றவராக அல்லாமல் பலருக்கும் ஆதரவு தரும் ஆலமரமாக இருப்பதை படித்தபோது நெகிழ்ந்து நெக்குருகிப் போனேன். வாழ்வின் பயணத்தில் நாம் அறியும் ஒவ்வொரு மனிதரும் ஏதோ ஒன்றை நமக்குக் கற்றுத்தந்து கொண்டே இருக்கிறார்கள். திருமாறனின் தொண்டு சிறக்கட்டும்! மனிதம் தழைக்கட்டும்! எனப் பதிவிட்டிருந்தார்.