Tenkasi : கரடி தாக்கியதில் 3 பேர் படுகாயம்..! ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி..! பீதியில் மக்கள்..
தென்காசியில் கரடி தாக்கியதில் மூன்று பேர் படுகாயமடைந்த நிலையில், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட கடையம் பகுதி களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம் சரகத்திற்குட்பட்டது. இங்குள்ள கடனாநதி அணை அடிவாரத்தில் உள்ளது பெத்தான்பிள்ளைக்குடியிருப்பு. மலையடிவாரத்தில் உள்ள கிராமம் என்பதால் வனப்பகுதியிலிருந்து சிறுத்தை, கரடி, யானை, மான், மிளா, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து நாய், ஆடு, மாடு உள்ளிட்ட வளர்ப்பு விலங்குகளைத் தாக்கித் தூக்கிச் செல்வதோடு, பயிர்களையும் அழித்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகிறது. இதனால் வன விலங்குகள் ஊருக்குள் புகாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகளும், பொதுமக்களும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த சூழலில் இன்று காலை 7.30 மணியளவில் கடையம் அருகே உள்ள கலிதீர்த்தான்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வைகுண்டமணி என்பவர் பெத்தான் பிள்ளைக் குடியிருப்பில் உள்ள கடைகளுக்கு மசாலாப் பொருள்கள் கொண்டு சென்றுள்ளார். அப்போது கிராமத்தில் நுழையும் நேரத்தில் சாலையோரத்தில் மறைந்திருந்த கரடி ஒன்று வைகுண்டமணி மீது பாய்ந்து தாக்கியுள்ளது. அப்போது அங்கு வந்த பெத்தான் பிள்ளைக்குடியிருப்பைச் சேர்ந்த பச்சாத்து என்பவரின் மகன்களான நாகேந்திரன் மற்றும் சைலப்பன் ஆகியோர் கரடியை விரட்டியுள்ளனர். ஆனால் கரடி அவர்கள் மீதும் பாய்ந்து தாக்கியுள்ளது.
கரடி தாக்கியதில் மூவரும் படுகாயமடைந்தனர். மேலும் அந்த வழியாக வந்தவர்கள் தகவல் கொடுத்ததையடுத்து கிராம மக்கள் திரண்டு வந்து கரடியை விரட்டியுள்ளனர். மேலும் இது குறித்து தகவலறிந்த கடையம் வனச்சரகத்தைச் சேர்ந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கரடி தாக்கியதில் காயம்பட்ட மூவரையும் உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். முகம், தலை, கை என மூவரையும் கடித்து குதறியதில் இரத்த வெள்ளத்தில் மூவரும் சிகிச்சைக்காக அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தொடர்ந்து அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவர்களுக்கு தீவீர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக மலையடிவாரப் பகுதியில் வனவிலங்குகள் ஊருக்குள் வராமல் இருக்க வனத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள சூரிய மின்வேலி, அகழி உள்ளிட்டவை பயனற்ற வகையில் உள்ளதாகவும், இதனால் தொடர்ந்து வன விலங்குகள் ஊருக்குள் புகுந்து விடுகிறது. எனவே இதனை தடுக்க நிரந்தர தடுப்பு அமைக்க வேண்டும் என வலியுறுத்தியும், வனத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதாலேயே இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் குற்றம் சாட்டிய அப்பகுதி மக்கள் கடையம் வனச்சரக அலுவலம் முன்பு சாலை மறியல் மற்றும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதின் அடிப்படையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்த மறியல் கைவிடப்பட்டது. இதேபோல கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கோட்டைவிளை பட்டியில் கரடி தாக்கியதில் பெண் ஒருவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்த சம்பவத்தை தொடர்ந்து ஒரு வாரத்தில் டாணா பகுதியில் இரவு நேரத்தில் கரடி சுற்றி திரிந்த நிலையில் அந்த வீடியோ சமூக வலைதலங்களில் பரவியது. தொடர்ச்சியாக கடையம், ஆழ்வார்குறிச்சி, ஆம்பூர், பாபநாசம் சுற்று வட்டார பகுதியில் சுற்றி திரியும் கரடியை கூண்டு வைத்து பிடிப்பதோடு ஊருக்குள் புகாத வண்ணம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.